வெளிநடப்புச் செய்த மஹிந்த அணிக்கு ‘வேட்டு’! வாக்கெடுப்பை நடத்திக் காட்டியது ரணில் அணி!! – கூட்டமைப்பு, ஜே.வி.பி. உட்பட 121 எம்.பிக்கள் ஆதரவு

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். மஹிந்த அணியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.

இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சபாநாயகரின் அறிவிப்பு அங்கீகரிக்கப்பட்டது.

சபை அமர்வு ஆரம்பம்
தெரிவுக்குழு அறிவிப்பு

நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. உடனே தெரிவுக்குழு தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, மகிந்த சமரசிங்க, எஸ்.பி.திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா ஆகிய 5 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், லக்ஷ்மன் கிரியெல்ல ஆகிய 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் விஜித ஹேரத்தும் தெரிவுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் அறிவித்தார்.

சபை அமர்வைக் குழப்பிய
மஹிந்த அணி வெளிநடப்பு

இதையடுத்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மைப் பலம் உள்ளது எனவும், தமக்கு தெரிவுக்குழுவில் 7 ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. தினேஷ் குணவர்தன வாதிட்டார்.

சபாநாயகரின் முடிவுக்கு அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். சபாநாயகர் ஐ.தே.கவின் சார்பாக செயற்படுகின்றார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அத்துடன், மஹிந்த அணி உறுப்பினர்களும் சபை அமர்வைக் குழப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு எதிராக ஐ.தே.க. தரப்பில் இருந்து கூச்சல் எழுப்பப்பட்டது.

இதன்போது, தெரிவுக்குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் (மஹிந்த அணி உறுப்பினர்கள்) சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

இலத்திரனியல்
வாக்கெடுப்பு

ஐ.தே.கவின் கோரிக்கையை அடுத்து சபையின் அனுமதியுடன் தெரிவுக்குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

மஹிந்த அணி உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையாகக் காட்சியளித்தன. இந்நிலையில், இலத்திரனியல் வாக்கெடுப்பு நடைபெற்றது.

121 எம்.பிக்கள் ஆதரவு

சபைக்கு இன்று வருகை தந்திருந்த ஐ.தே.க., கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் தெரிவுக்குழு நியமனத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து 121 உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் அங்கீகரிக்கப்படுகின்றது என்ற அறிவிப்பை சபாநாயகர் சபையில் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *