மாவீரர் நினைவேந்தலைத் தடுக்க யாழ்.நீதிமன்றத்தில் பொலிஸ் மனு! – நாளை கட்டளை வழங்கப்படும் என அறிவிப்பு

“பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்குக் கட்டளை வழங்க வேண்டும்.”

– இவ்வாறு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மனு மீதான கட்டளை நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்தார்.

மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான நிலையில் பொலிஸாரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்பவரால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாதத் தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

எனவே, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற ஏற்பாடுகளின் கீழ் நிகழ்வுக்குத் தடை உத்தரவு வழங்க வேண்டும்.

அத்துடன், நிகழ்வில் தடை செய்யப்பட் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை மன்று வழங்கவேண்டும்” என்று பொலிஸ் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று பிற்பகல் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி குமராவடிவேல் குருபரன் மன்றில் தோன்றினார். எனினும், வழக்கை பின்னர் கூப்பிடுவதாக மன்று அறிவித்ததால் அவர் நீதிமன்றிலிருந்து வெளியேறினார்.

பின்னர் மனு மீளவும் அழைக்கப்பட்டபோது பொலிஸார் சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

“கோப்பாயில் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள (மாவீரர் துயிலும் இல்லம்) காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. அது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை” என்று கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

மனுவில் எதிர் மனுதாரர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லையே? என்று மன்று கேள்வி எழுப்பியது. எந்த நபர் மீதும் குற்றச்சாட்டு இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸாரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த நீதிமன்று நாளை வெள்ளிக்கிழமை கட்டளை வழங்குவதாக மனுவை ஒத்திவைத்தது.

இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவை 120 ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த மனுவைப் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

“2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாதத் தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும்” என்று பொலிஸார் மனுவில் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *