இலங்கையின் அரசியல் பிரளயத்தில் ஓர் அதிரடி! – இந்திய, அமெரிக்கத் தூதுவர்கள் பாதுகாப்புச் செயலருடன் பேச்சு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும் உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்புக்கள், பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளன.

இந்தியத் துணைத் தூதுவர் கலாநிதி ஷில்பக் அம்புலே தலைமையிலான இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள், இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டார்.

அதேவேளை, புதிதாகப் பதவியேற்ற அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்சும், கடந்த திங்கட்கிழமை, இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க துணைத் தூதுவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ரணில் – மைத்திரி கூட்டு அரசுடன் அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தியிருந்தன.

தற்போது, ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களினால், இந்த உறவுகள், ஒத்துழைப்புகளின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

அமெரிக்காவும், இந்தியாவும் மஹிந்த அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாத நிலையில், மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன், இருதரப்பு பாதுகாப்பு உறவுகள், திட்டங்களின் எதிர்காலம் குறித்தே பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *