இலங்கை அரசியல் நிலைமை: சந்திரிகா – மோடி நேரில் பேச்சு

மாலைதீவில் புதிய ஜனாதிபதி இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் நேற்று நடந்த மாலைதீவின் புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னதாக, இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த நிகழ்வில் பங்கேற்பார் என்று அவரது தனிப்பட்ட செயலர் கூறியிருந்தார். எனினும், மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோர் மாத்திரம் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களுக்காக போடப்பட்ட ஆசனங்களில் முன்வரிசையில் இந்தியப் பிரதமர் மோடியுடன் முன்னாள் ]சந்திரிகா மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிகளான கயூம், நசீட் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் சந்திரிகாவிடம் இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பில் இந்தியப் பிரதமர் கேட்டறிந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க அண்மையில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கடந்த மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னர், இந்தியத் தலைவர்களுடன் இலங்கையின் அரச தலைவர்கள் எவரும் தொடர்புகொள்ள முடியாத நிலை இருந்து வரும் சூழலில், இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள சந்திரிகா குமாரதுங்க இந்தியப் பிரதமருடன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *