மாணவி கொலை சந்தேக நபர் சிக்கியது எப்படி?

 

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை நடத்திய மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் இருந்த போது தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், “இன்று வீட்டுக்கு சென்றால் கதை முடிந்துவிடும்” என்று கூறிவிட்டு ஓடி சென்று குதித்துவிட்டதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல பிரிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர், சந்தேக நபர் குறித்த ஹோட்டலில் தங்கியிருப்பதாக தனியார் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல உத்திகளை கையாண்டுள்ளனர்.

அதற்கமைய, சந்தேக நபர் ஹிக்கடுவையில் இருந்து வாடகை அடிப்படையில் கார் ஒன்றைப் பெறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, பொலிஸார் ஒரு உளவாளியை நியமித்து வாடகைக்கு காரைக் கொடுத்துள்ளனர். அந்த கார் மூலம் காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​வீதித் தடையினால் வாகனம் நிறுத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சந்தேக நபரும் படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவருக்கு இரண்டு முறை திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் சில நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் நண்பர் மற்றும் அவரது காதலியின் உதவியுடன் குறித்த விடுதிக்கு பாடசாலை மாணவியுடன் சென்றதாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு யுவதியின் அடையாள அட்டையை காட்டி ஹோட்டலில் இரண்டு அறைகளை பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னர் நால்வரும் மது அருந்தியதாகவும் பிரதான சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது உயிரிழந்த மாணவியின் நண்பரும், காதலரும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர். போதையில் அமைதியின்றி நடந்து கொண்டதாகவும், பின்னர் மேல் மாடியில் இருந்து குதித்ததாகவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவரது வாக்குமூலங்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், சந்தேகநபர் ஏற்கனவே தெற்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 48 மணி நேர காவலில் வைக்க உத்தரவிட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *