வடக்கில் கஜா புயல் தாண்டவம் – பாடசாலைகளுக்கு விடுமுறை!
வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறைதினமாக வடமாகாண ஆளுநர் கல்வியமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.
கஜா புயல் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் குறிப்பிடுகையில்,
கஜ புயல் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற நிலை நேற்று மாலைவரையில் உணரப்படாத நிலையில் பாடசாலைகளில் மூன்றாம் தவணை பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக திட்டமிட்டு பாடசாலைக்கு விடுமுறை வழங்குவது தாமதமானது .
ஆயினும் இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதி பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இந்த தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதி வலய பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறை வழங்குவதாயின் , பரீட்சை நடாத்தாது விடுவதாயின் வடமாகாணம் முழுவதுக்கும் பரீட்சை நடாத்தாது இருத்தல் வேண்டும். இதனை கருத்தில் கொண்டு கல்வித்திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.