‘உயிர்ப்பு ஞாயிறு கொடூரம்:’ – கொச்சிக்கடை முதல் சாய்ந்தமருது வரை

இலங்கையில் 253 உயிர்களை பலிவங்கிய பயங்கரவாத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வார காலம் ஆகின்றது.கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத இயக்கத்தினால் 8 இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.45க்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள கிறித்துவ தேவாலயங்கள் மீது இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அதேபோன்று கின்ஸ்பேரி, சங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளையும் இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு முன்பாக உள்ள விடுதியொன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தெமட்டகொடை பகுதியில் விசேட சுற்றி வளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தெமட்டகொடை பகுதியிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொள்ளும் வகையில், குண்டொன்றை வெடிக்கச் செய்திருந்தார்.

இவ்வாறு கடந்த 21ஆம் திகதி 8 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.இந்த சம்பவங்களில் இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

காயமடைந்தவர்களில் பலர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.தாக்குதலை தொடர்ந்து, தேசிய தவூஹித் ஜமாத் அமைப்பு இதனை நடத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அன்று முதல் நாட்டில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை தொடர்ந்து வருகின்ற பின்னணியில் 120திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த வெள்ளிகிழமை முஸ்லிம்களின் பள்ளிவாசல் தொழுகை நேரத்திலும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.சில தரப்பினர் பள்ளிவாசல்களுக்கு சென்றிருந்த போதிலும், பலர் அதனை புறக்கணித்திருந்தனர்.

இந்த நிலையில், அம்பாறை – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பொன்றின் போது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த தகவல்களின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சாய்ந்தமருது பகுதியில் 6 தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன.

இதில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், சில ஆயுததாரிகள் பாதுகாப்பு பிரிவினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதுடன், அவர்களின் உயிர்களையும் மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பின்னணியில் இன்றைய தினம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தினால், பேராயர் இல்லத்தில் ஞாயிறு ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு நடத்தப்படும் ஆராதனைகள், இலங்கையிலுள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதுடன், அதனை கிறித்துவர்கள் வீட்டிலிருந்து பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

முழுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஆராதனைகள் இடம்பெறுகின்றன.

தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன், ஒரு வாரம் ஆகிறது.

தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தி, இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அவற்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவினர் மாத்திரமன்றி சர்வதேச பாதுகாப்பு பிரிவினரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *