மைத்திரி – மஹிந்த வைத்த மரணப்பொறியில் இருந்து நாட்டு மக்களை மீட்போம்! – ஐ.தே.க. ஆர்ப்பாட்டத்தில் சஜித் சூளுரை

“மைத்திரி – மஹிந்த கூட்டணியால் இப்போது வைக்கப்பட்டுள்ள மரணப்பொறியில் இருந்து நாட்டு மக்களை மீட்போம்.”

– இவ்வாறு சூளுரைத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நேற்று குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தம்மிடம் அரசை ஒப்படைக்கக் கோரி ஐக்கிய தேசிய முன்னணி இன்று பிற்பகல் கொழும்பில் மாபெரும் பேரணியை நடத்தியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் ஜனநாயகத்தை – நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றிய பெருமை சபாநாயகர் கரு ஜயசூரியவையே சாரும். முடிந்தால் – தைரியம் இருந்தால் நாளை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றுக்கு முன்வாருங்கள் என்று நான் போலி அரசுக்கு சவால் விடுக்கின்றேன். மைத்திரி – மஹிந்த கூட்டணியால் இப்போது வைக்கப்பட்டுள்ள மரணப்பொறியில் இருந்து நாட்டு மக்களை மீட்போம்” – என்றார்.

மனோ எம்.பி.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. உரையாற்றும்போது,

“எங்கள் எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தியமைக்காக முதலில் மைத்திரிக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் போலி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எங்கள் ஆட்சியை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம். கொழும்புடன் இந்த மக்கள் போராட்டம் நிற்காது . கண்டி , குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என நாடளாவிய ரீதியில் போராட மக்களுடன் நாமும் முன்வருவோம்” – என்றார்.

சம்பிக்க

“முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலையும் நடராளுமன்றத் தேர்தலையும் ஒன்றாக நடத்துங்கள். நான் இதை ஒரு சவாலாக ஜனாதிபதிக்கு விடுக்கின்றேன்” என்று இந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *