அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இந்து பெண் எம்.பி. போட்டி!

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.

இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடேன், இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த வரிசையில் அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டின் (வயது 37) பெயரும் தற்போது இணைந்து இருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது துளசி கப்பார்ட், பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது 4-வது முறையாக கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஜனநாயக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக எழுச்சி பெற்று வரும் துளசி கப்பார்ட், தற்போது நாடாளுமன்றத்தின் முக்கிய குழுக்களான ஆயுத சேவைகள் கமிட்டி மற்றும் வெளி விவகாரங்களுக்கான கமிட்டிகளில் அங்கம் வகித்து வருகிறார். இந்தியா-அமெரிக்க உறவுக்கு ஆதரவு, ஈராக் போருக்கு எதிர்ப்பு, சவுதிக்கு ஆயுதங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயக கட்சியின் பலமிக்க குரலாக துளசி விளங்கி வருகிறார்.

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துளசிக்கு ஆதரவு வலுத்து வருகிறது. எனவே அவர் இந்த தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 9-ந் தேதி நடந்த மாநாடு ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சம்பத் சிவாங்கி, துளசி கப்பார்டை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர், துளசி கப்பார்ட், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஆக வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

குடியரசு கட்சியை சேர்ந்தவரும், கடந்த பல ஜனாதிபதி தேர்தல்களுக்கு அந்த கட்சி சார்பில் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருந்தவருமான டாக்டர் சம்பத் சிவாங்கி, ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசிக்கு ஆதரவாக பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதைக்கேட்டதும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனினும் பின்னர் பேசிய துளசி கப்பார்ட், சம்பத் சிவாங்கியின் கருத்தை ஆதரிக்கவோ, மறுக்கவோ இல்லை. அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நன்கொடையாளர்களிடம் துளசி சார்பில் நிதி திரட்டும் வேலைகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டுக்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. அங்குள்ள முக்கியமான பல மாகாணங்களில் தேர்தல் வெற்றிக்கு இந்தியர்கள் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதைப்போல அவர் ஜனாதிபதியாக தேர்வானால் அமெரிக்காவின் இளமையான மற்றும் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *