ஆங் சான் சூகிக்கு பெரும் நெருக்கடி – மன்னிப்பு சபையும் விருதை மீளப்பெற்றது!

 

மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது.

சூகிக்கு வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் என்ற கௌரவப்பட்டமே இவ்வாறு மீளப்பெறப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு மியன்மார் ஆட்சியாளர்களால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மாரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக அவர் குரல்கொடுக்காதிருந்தமைக்காக விருது மீளப் பெறப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ அடக்குமுறைகள் காரணமாக 7 இலட்சத்துக்கும் அதிகமானோர் அயல் நாடாகிய பங்களாதேஷுக்கு தப்பிச்சென்றிருந்தனர்.

இந்த மனிதகுல அவலம் தொடர்பில் சூகி குரல் கொடுக்காதிருந்தமை சர்வதேச அளவில் விமர்சனத்தை அதிகரித்திருந்தது.

இந்தநிலையில், கௌரவப்பட்டத்தை மீளப்பெறுவது தொடர்பிலான கடிதம் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் குமி நைடூவினால் சூகிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை, உத்வேகம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு ஆகியவற்றின் சின்னமாகத் திகழும் பகுத்தறிவுக்கான தூதுவர் என்ற அதிசிறப்பு மிக்க விருதை மீளப்பெறுவதாக அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தமையால், அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களால் சூகி பல வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவர் இவ்வாறு குரல் கொடுத்தமைக்காக நோபல் பரிசு உள்ளிட்ட பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

இருப்பினும், அண்மைக்கால ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமையால் அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதுடன், நோபல் பரிசு உள்ளிட்ட விருதுகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *