நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள்மீதான விசாரணை நாளையும் – சட்டமா அதிபரும் விளக்கமளிப்பார்!

நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் இரண்டு மணிக்கு பிரதம நீதியரசர் நளின் பெரோ தலைமையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

நீதிமன்றத்தில் சட்ட வல்லுநனர்கள் நிரம்பியிருக்க மாலை வரை கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. அனைத்து வாதங்களையும் கேட்டு, ஆராய்ந்த நீதியரசர்கள் நாளை வரை விசாரணைகளை ஒத்திவைத்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம், சட்டத்தரணி அருண லக்சிறி உள்ளிட்ட தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதில் முக்கியமாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரும் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ரட்னஜீவன் என்பவரும் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து வெளியிட்ட அறிவித்தல் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி இந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை இடைநிறுத்தி வைக்க உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெருமளவில் கூடியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் 9ஆம் தேதி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த பின்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்திருந்தார். நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில், நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பிலான சட்ட மாஅதிபரின் விளக்கம் நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *