சீனாவில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் உயிரிழப்புகள்

சீனாவில் கொரோனா வைரஸின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பல வாரங்களாக 3,300ஐ ஒட்டி இருந்து வந்த நிலையில், அது இன்று ஒரே நாளில் 4,600க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

உலகிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டு இடமாகவும், நோய்த்தொற்று பரவலின் மையமாகவும் விளங்கிய வுஹான் நகரத்தில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திடீரென 50 சதவீதம் உயர்த்தப்பட்டதே இதற்கு காரணம்.

புதுப்பிக்கப்பட்ட தரவு மற்றும் மருத்துவமனைக்கு வெளியே நேர்ந்த உயிரிழப்புகள் ஆகியவையே இதற்கு காரணமென அந்த நகர நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் தெரிவித்து வந்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இருப்பினும், இந்த புதுப்பிக்கப்பட்ட எண்ணிக்கையை வெளியிட்ட வுஹான் நகர அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தனர்.

சுமார் 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹானில் 11 வாரங்களாக நடைமுறையில் இருந்த முடக்க நிலை கடந்த வாரம் முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *