நல்லாட்சி பிழையென்று மஹிந்தவை ஏற்க சிலர் முனைவு!!

மஹிந்தவை பிழையென்று நல்லாட்சியை ஏற்றினோம்!

இப்போது நல்லாட்சி பிழையென்று மஹிந்தவை ஏற்ற சிலர் முனைவு!!

                 –  சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் காட்டம்

மஹிந்த ஆண்டபோது மஹிந்தவை பிழையென்று நல்லாட்சியை அரியணை ஏற்றினோம். இப்போது நல்லாட்சி பிழையென்று மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அழகுபார்க்க நம்மில் சிலர் ஆசைப்படுகிறோம். அதன்பின் மீண்டும் மஹிந்த கூடாதென்று நல்லாட்சி தேடுவோம். இது தொடர்கதையா? என கேள்வி எழுப்பியுள்ளார் அரசியல் விமர்சகர், சட்டமுதுமானி வை.எல்.எஸ்.ஹமீட்,
இலங்கையின் நிகழ்கால அரசியல் சூழ்நிலையில் அவர் முஸ்லிம் அரசியல் யதார்த்தம் தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடும் போது,
அரசியல் சதிராட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. குதிரையோட்டம் இரு திசையிலும் வேகமாகநடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குதிரைப்பேரம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் இலாபகரமாக இருக்கின்றது.
நம்மவர்களோ எந்தக்குதிரைக்கு பந்தயம் கட்டுவது என்று சந்தை நிலவரத்தை உற்றுநோக்கிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இலாபநட்டக் கணக்குப்பார்த்து குதிரைப் பந்தையத்தைக் கட்டிவிட்டு ஆயிரத்தோர் இரவு கதைகளை அழகாக அவிழ்த்து விடுவார்கள். அரங்குமோ அசைவின்றி அக்கதை கேட்கும்.
நல்லாட்சி செய்த நாசங்களைப்பற்றிப் பேசுவார்கள். ஏமாறவைத்த இழக்கார செயல்களை இனிமையாய்ச் சொல்ல இமைகொட்டாமல் நம்மவர்கள் கேட்ப்பார்கள். தோற்றுப்போன முயற்சிகளை தொகைதொகையாய்க் கொட்டுவார்கள்.
சபதங்கள் கொட்டும். ஒப்பந்தம் இதழ் விரிக்கும். உத்தரவாதங்கள் உவகை கொள்ளவைக்கும். உலகையே மாற்றும் சக்தி தமக்கிருக்கிறதென்பார்கள். இன்னொருமுறை நம்மை ஏமாற்ற.
இதுதான் நம் சமூகமும் நம் அரசியலும்.
மறுபுறம்,  நம்மில் ஒரு பகுதி  நல்லாட்சியில் நாம் சாதித்ததென்ன? நல்லாட்சியை இன்னும் தாலாட்ட என்று கேள்விகேட்கிறார்கள். மறுபகுதி, மஹிந்தவின் தீய ஆட்சி மறந்துவிட்டதா? என எதிர்க்கேள்வி தொடுக்கிறார்கள். நம்மில் பெரும்பகுதியோ யாரையாவது தலைவர்கள் ஆதரித்துவிட்டு கதைசொல்ல வருவார்கள், கதை கேட்டால் போதும் என ஆவலோடு மௌனமாக காத்திருக்கிறார்கள். எந்தப்பக்கம் சரி, எந்தப்பக்கம் பிழை? யாரை ஆதரிப்பது?
மஹிந்த ஆண்ட போது மஹிந்தவை பிழையென்று நல்லாட்சியை அரியணை ஏற்றினோம். இப்போது நல்லாட்சி பிழையென்று மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அழகுபார்க்க நம்மில் சிலர் ஆசைப்படுகிறோம். அதன்பின் மீண்டும் மஹிந்த கூடாதென்று நல்லாட்சி தேடுவோம். இது தொடர்கதையா?
நேரடியாக ஆட்சித்தலைவர்களை நோக்கியே நம்சுட்டுவிரல் நீளும் என்றால் நம்மவர்க்கென்று கட்சிகளேன்? தேசியக்கட்சிகளில் சங்கமித்து காலத்துக்கு காலம் கட்சிகளை மாற்றலாமே!
தேசியக்கட்சிகள் தங்கத்தட்டுகளில் வைத்து நம் உரிமைகளை, பாத்தியதைகளைத் தரமாட்டார்கள், என்றுதானே நமக்கென்று கட்சிகளை ஆரம்பித்தோம். நமக்குரியவை கிடைக்கவில்லையென்றால், நம்பாதுகாப்பு கேள்விக்குறியென்றால், நம் உரிமைகள் பறிபோகிறதென்றால் நம் கட்சிகள்தானே நமக்கும் பதில் சொல்லவேண்டும். நாம் கேட்டோமா? கேட்கின்றோமா? நாம் வாக்களித்தது அவர்களுக்குத்தானே!
தேசியக்கட்சிகளே ஆட்சியாளர்கள் என்பதனால் தேசியக்கட்சிகளையே நாமும் குற்றம் காண்கின்றோம். தேசியக்கட்சிகள் ஆட்சிசெய்ய தெம்புகொடுப்பது (முட்டு ) நாம் வாக்களித்த நம் கட்சிகளல்லவா? அவர்கள் நமக்காக நமக்குரியவற்றை ஏன் கேட்டுப்பெறவில்லை. கேட்டோமா?
நாமும் தேசியக்கட்சிகளையே பிழை என்கிறோம். நம்கட்சிகளும் தேசியக்கட்சிகளே பிழை என்கிறார்கள். இதைச் சொல்வதற்கு நமக்கு கட்சிகள் தேவையா? இதைவிட நேரடியாக தேசியக்கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டு தேசியக்கட்சிகளைக் நாமே குறைகூறலாமே!
ஒரு அமைச்சர் கூறுகின்றார், சம்பந்தன் கேட்டால் உடனே கிடைக்கின்றதாம். அவர் பலதடவைகள் கேட்டும் எதுவும் கிடைக்கவில்லையாம். இதைச் சொல்ல நா,  நாணம் கொள்ளவில்லையா? அவர்கள் ஒரு சிறுபான்மையை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். நீங்களும் ஒரு சிறுபான்மையைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறீர்கள்.
அவர்கள் மறைமுக முட்டுக்கொடுக்கிறார்கள். நீங்கள் நேரடி முட்டுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் கேட்டால் கிடைக்காது; அவர்கள் கேட்டால் கிடைக்கும் என்றால் குறை உங்களிலா? ஆட்சியாளர்களிலா? இதற்குக் காரணம் தெரியுமா? அவர்கள் முரண்பாட்டிற்குள் இணக்கப்பாட்டு அரசியல் செய்கிறார்கள். அவர்கள் அவர்களாக இருந்துகொண்டு அரசுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள். சாதிக்கிறார்கள்.
நீங்கள் இணக்கப்பாட்டு அரசியலால் சாதிக்கலாம். முடியாதவற்றை இணக்கப்பாட்டிற்குள் முரண்பாட்டு அரசியலால் சாதிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் முழுமையான முரண்பாட்டு அரசியலுக்குள் வரலாம். ஆனால் நீங்கள் சரணாகதி அரசியல் செய்யும்போது எப்படி சாதிக்க முடியும்?
நீங்கள் சாதிப்பதற்கு நீங்கள் நீங்களாக இருக்கவேண்டுமே! உங்களுக்கு தேர்தலுக்கு மட்டும் முஸ்லிம்கட்சி, தேர்தல் முடிந்தால் நீங்களும் ஆளுகின்ற தேசியக்கட்சி.
அடுத்த தேர்தலுக்கு எந்தக்கட்சி ஆட்சிக்குவரும் என கணக்குப்போட்டு அணிசேர்வீர்கள். தேர்தல் முடிந்தால் அத்தேசியக்கட்சியாகவே மாறிவிடுவீர்கள். எப்படிச் சாதிப்பீர்கள்?
திகன கலவரத்தைத் தொடர்ந்தாவது நாம் சாதிக்கவேண்டிய ஒரு பட்டியலைக்கொடுத்து காலக்கெடு விதித்தீர்களா? அக்காலக்கெடுவிற்குள் பட்டியலிலுள்ளவற்றை நிறைவேற்றாவிட்டால் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்றீர்களா? அல்லது ராஜினாமா செய்துவிட்டு அரசிற்குள்ளேயே பின்வரிசையில் இருந்து ஆதரவுகொடுத்து அவ்வழுத்தத்தினூடாகவாவது சாதிக்க முற்பட்டீர்களா?
அப்படியும் சாதிக்க முடியாவிட்டால் எதிர்கட்சியில் அமர்ந்து காலக்கெடுவிதித்து அரசுக்கு மறைமுக முட்டுக்கொடுத்தாவது சாதிக்கமுற்பட்டீர்களா? எதையும் செய்யாமல் ஆளும் கட்சியாய் மாறி அடிமை அரசியல் செய்துவிட்டு இப்பொழுது எந்தப்பக்கம் போவதென்று எண்கணிதம் படிக்கிறீர்கள்.
விளைவறிந்து முடிவெடுப்பீர்களா? விளைச்சலறிந்து முடிவெடுப்பீர்களா? உங்கள் முடிவைத் தீர்மானிக்கப்போகும் காரணியென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *