இந்தியாவில் பரவிவரும் புதிய வகை வைரஸ் நோய்!

இந்தியாவில் கேட் க்யூ என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ICMR தெரிவித்துள்ளதாக “தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வகை வைரஸ்கள், தொற்றை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஐசிஎம்ஆர் கூறியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பில்லா உயிரினங்களிலிருந்து உருவாகும் வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் பன்றிகள்,கியூலெக்ஸ் கொசுக்கள் ஆகியவற்றில் காணப்படும். ஆனால் இதுவரை சீனா மற்றும் வியட்நாமில்தான் இந்த வகை தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், மூளைக் காய்ச்சல், மூளை அழற்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இந்தியாவில் கியூலக்ஸ் கொசு போன்ற உயிரினங்களின் பரவல் குறித்து தெரிந்து கொள்ள புனேவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவன விஞ்ஞானிகள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 883 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆராய்தனர்.

அதில் இருவரின் உடலில் இந்த கேட் க்யூ வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பது தெரிய வந்ததால் இதற்கு முன்னர் அந்த இருவரும் அந்த வைரஸின் பாதிப்பு உள்ளாகி, அதிலிருந்து குணமடைந்திருக்கலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அந்த இரண்டு ரத்த மாதிரிகளும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளதும் அவர்கள் முறையே 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டு இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

சித்தரிப்பு படம்
படக்குறிப்பு,சித்தரிப்பு படம்

இருந்தபோதும், இந்த ஆய்வு நடைபெறும் காலத்தில் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிடம் அந்த வைரஸ் தொற்று இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக லைவ் மிண்ட் ஊடகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் காணப்படும் கியூலக்ஸ் வகை கொசுக்கள் இந்தியாவிலும் அதிகம் காணப்படுவதால், அவற்றின் மூலம் நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகளானது இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிகல் ரிசர்ச் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *