கிழக்கில் வெள்ள அபாயப் பாதிப்பு! உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஜனாதிபதி!! – முன்னாள் முதல்வர் நஸீர் வலியுறுத்து

“நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கில் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடரும் அடைமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இடங்களில் நிவராணப்பணிகளை மேற்கொள்ளுவதற்கு எதுவித பேதங்களும் இன்றி ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக திடீரென ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் தேக்கநிலை இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிக அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதென இந்த மாவட்டங்களில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் தரவுகளில் மூலம் இருந்து அறியமுடிகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்,வாகரை பாசிக்குடா, வாழைச்சேனை, உன்னிச்சை, பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, மைலாம் பாவெளி,ஏறாவூர், மட்டக்களப்புநகர், செங்கலடி, கிரான் போன்ற பகுதிகளும் –
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில். திருக்கோவில்;, லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேணை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை,காரைதீவு, கல்முனை, நற்பிட்டி முனை, நாவிதன்வெளி,மருதமுனை போன்ற பகுதிகளும் – திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், கிண்ணியா, திருகோணமலை நகர், மூதூர் போன்ற பல பிரதேசங்கள் வெள்ள அபாயத்துக்குள் சிக்குண்டுள்ளன.

இப்பிரதேசங்களில் உள்ள தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்குள் வாழமுடியாத அவலத்தை எதிர்கொண்டுள்ளனர். பலவீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் இடம் பெயர்ந்து தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பகுதிகளில் காலதாமதமின்றி துரிதகதியில் நிவாரண பணிகளை மேற் கொள்ளவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்கவேண்டும். இதில் கட்சி பாகுபாடுகள் இன்றி அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *