ரணிலை உடன் பிரதமராக்குங்கள்! – மைத்திரியிடம் நஸீர் கோரிக்கை
“ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான கதவுகளைத் திறக்க சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டமைக்கு கிடைத்த வெற்றியே உயர்நீதிமன்றத் தீர்ப்பாகும். இந்த ஜனநாயக அடிப்படையின் அடையாளமாக மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதற்கு ஜனாதிபதி ஆதரவளிக்க வேண்டும். மீண்டும் ரணில் பிரதமரானவுடன் முதல் நடவடிக்கையாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி அடைக்கப்பட்டிருக்கும் சகல ஜனநாயகக் கதவுகளையும் திறக்க முன்வரவேண்டும்.”
– இவ்வாறு கோரியுள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக நேற்று வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“அரசியல் அமைப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நான்கரை ஆண்டு கள் செல்லும்வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதை உயர்நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது. அதனூடாக ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. இத்தகைய சூழலில் மீண்டும் பிரதமராகப் பணி ஏற்கும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்க தமது முதற்பணியாகக் கலைக்கப்பட்டு – ஜனநாயக ரீதியாக முடக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் பழைய தேர்தல் முறையூடாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக்கூடிய அதிகாரம் பிரதமருக்கு இருந்தது. அதனை அவர் தமது அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் மேற்கொண்டிருக்க முடியும். எனினும், ரணில் விக்கிரமசிங்க அதனைச் செய்யத் தவறியிருந்தார். இதன் காரணமாகச் சிறுபான்மை மக்கள் தமது ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. ஆளுநர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஜனநாயகத்தின் குரல் அறுக்கப்பட்டுள்ளது என்றுகூடச் சொல்ல முடியும்.
இக்காலத்தில் அவரால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேணையையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. அதாவது பெண்களுக்கு மாகாண சபைகளில் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று திரைமறைவில் தமது அமைச்சரவையில் அவர் அவசரமாக நிறைவேற்றிய அந்தப் பிரேரணையும் கருத்தில்கொள்ள வேண்டும். இதன் தாக்கம் சிறுபான்மை மக்களின் முக்கியமாக முஸ்லிம் மக்களுக்கு அளப்பரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தமையையும் நாம் மறந்துவிட முடியாது.
இத்தகைய நிலையில் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பணி ஏற்றதும் தமது அமைச்சரவையின் ஊடாக அங்கீகாரத்தைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்த முன்வந்தார் என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஐனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான சமகாலத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்ட சிறுபான்மையின மக்களின் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் இந்த விடயத்தில் கூடிய கவனம் கொண்டு புதிதாக அரசை ஏற்கும் தரப்பினருக்குக் கூடிய அழுத்தம் கொடுத்துச் செயற்பட முன்வரவேண்டும்” – என்றுள்ளது.