வியாழேந்திரன் விட்ட தவறை திருத்திக்கொள்ளச் சந்தர்ப்பம்! – ஸ்ரீ நேசன் எம்.பி. தெரிவிப்பு

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இணையவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அராஜகங்கள், அடாவடித்தனங்கள் மற்றும் கடத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும், அவர்களுக்குத் தண்டனைகளை வழங்கி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அபிலாஷைகளை நிறைவேற்றவேண்டும் எனவும் தெளிவாக தமிழ் மக்கள் தங்களின் ஆணையை வழங்கியிருந்தனர்.

ஆனால், அவற்றை எல்லாம் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காமல் தன்னுடைய சுயநல அரசியலுக்காக யாருக்கு எதிராக வாக்களித்தோமோ, அவர்களுடன் கூட்டணி அமைத்து தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டீர்கள்.

அந்தவகையில் தவறுகள் எவருமே விடலாம். ஆகையால் அதனை திருந்திக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதனால் இப்போது இருக்கின்ற காலத்தையாவது பயன்படுத்தி, அத்தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் கட்சியில் இணைந்துகொள்வதற்கு வியாழேந்திரன் சிந்திப்பாராயின் சிறந்தவொன்றாகும்.

சிலரின் தவறான வழிநடத்தலினால் உங்களது எதிர்கால அரசியல் நகர்வுகளைப் பூச்சியமாக்கி கொள்ளாமல் தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் மீண்டும் கட்சியில் இணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *