மைத்திரி – மஹிந்தவிடம் சரணாகதியடைந்த வியாழேந்திரனை மீண்டும் இணைக்காது கூட்டமைப்பு! – மாவை எம்.பி. திட்டவட்டம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி மைத்திரி – மஹிந்தவிடம் சரணாகதியடைந்து பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.”

– இவ்வாறு தெரிவித்தார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா.

பிரதி அமைச்சர் பதவியை வியாழேந்திரன் இராஜிநாமாச் செய்துவிட்டு மீளவும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் எனக் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் எம்.பி. ஆகியோர் அறிவித்துள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர்கள் மாவை எம்.பியிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர்,

“எமது கட்சியிலிருந்து அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள வியாழேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றபோது அவருடைய பதவியையே அவர் இழக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம்.

ஆகவே, அவர் திரும்பி வருவது அல்லது அவரை இணைத்துக் கொள்வது என்றபேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு அவர் திரும்பி வந்தால் இணைத்துக் கொள்வதென யாரேனும் கூறியிருந்தால் அது தவறு. அவர் வந்தாலும் வராவிட்டாலும் அவரைக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப் போவதில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *