நல்லாட்சியில் தமிழருக்கு நன்மையே கிட்டவில்லை! – சிவசக்தி ஆனந்தன் சீற்றம்

“நல்லாட்சி அரசு என்ற பெயரில் கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு தமிழருக்கோ, அல்லது தமிழர் நலனுக்கோ எதுவும் செய்யவில்லை. மாறாக தமிழ் இனத்தை ஏமாற்றும் செயலிலேயே கடந்த அரசு செயற்பட்டது.”

– இவ்வாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை வருடமாக தாங்கள் ஆதரவு தெரிவித்த நல்லாட்சி அரசு தமிழ் மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு கையாண்டுள்ளது? என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசு என்ற பெயரில் கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு தமிழருக்கோ அல்லது தமிழர் நலனுக்கோ எதுவும் செய்யவில்லை. மாறாக தமிழ் இனத்தை ஏமாற்றும் செயலிலேயே கடந்த அரசு செயற்பட்டது.

அதேநேரம் அந்த அரசோடு இணைந்து செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும் என தொடர்ச்சியாகக் கூறி வந்தது.

ஆனாலும், தமிழருக்கு எதுவும் கிடைக்கவில்லை. நிபந்தனையுடன் அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நாங்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்தோம். அவர்கள் எதனையும் கேட்டதாக இல்லை. மாறாக அவர்கள் முழுமையாக என்னை ஒதுக்கினர்.

2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றமானது நாட்டின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மட்டுமே மூலதனமாக வைத்து இலங்கையை ஆட்சி செய்யும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வேறுவழியின்றிக் கைகோர்த்து ஆட்சிப்பீடம் ஏற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

இதுவரை காலமும் ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை மற்றொரு கட்சி எதிர்த்து வந்தது. சர்வதேச தலையீட்டின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இலங்கையுடனான சர்வதேச சமூகத்தின் இராஜதந்திர உறவுகள் சுமுகமாக்கப்பட்டதுடன் எமது பிரச்சினைகளை அனைவரும் மெல்ல மெல்ல கைவிடத் தொடங்கிவிட்டனர்.

யுத்தக்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறலுக்குக் கலப்பு பொறிமுறை ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை இந்த அரசு பெற்றுக்கொண்டது. இந்த விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்படாத நிலையில் மேலும் இரண்டாண்டு கால நீடிப்பையும் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் அரசு பெற்றுக்கொண்டது.

யுத்தம் முடிவுற்றவுடன் இயல்பாகவே மக்களின் காணிகளை மக்களிடம் கையளிப்பதையே ஏதோ காணி இல்லாத மக்களுக்கு புதிதாக காணிகளை வழங்குவதைப்போல விளம்பரம் செய்தது.

பெயருக்கு சில அரசியல் கைதிகளைப் பிணையில் விடுவித்துவிட்டு கைதிகளின் விடயத்தில் அக்கறை செலுத்துவதுபோல் நடித்தது. அடுத்துவரும் மார்ச் மாதத்துடன் காலநீடிப்பு வழங்கிய இரண்டு ஆண்டுகாலமும் முடிவடையும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் செயற்பட ஆரம்பித்ததுபோல் நாடகமாடுகின்றது.

யுத்தத்தின்போது எமது மக்களின் வீடுகளை இடித்து அழித்துவிட்டு அதனைக் கட்டிக்கொடுப்பதாக நாடகமாடுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எமது ஆதரவைச் சில நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும் என்று நாம் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உதாசீனம் செய்தார். அதன் விளைவை இன்று தமிழ்த்தேசிய இனம் அனுபவிக்கின்றது.

அத்துடன், புதிய அரசியல் யாப்பினூடாக தமிழ் மக்களுக்கான நிரந்தரத்தீர்வு வரப்போகிறது, நாம் முன்வைத்த இணைந்த வடக்கு- கிழக்கில் சுயாட்சி கிடைக்கப் போகிறது, அதனை எதிர்காலத்தில் அமையக்கூடிய எந்த அரசினாலும் மாற்றமுடியாத நிலை உருவாகும் என்று சொல்லியே ஏனைய விடயங்களைப் பிற்போட்டு மைத்திரி-ரணில் அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது.

இதேபோல், புதிய அரசியல் யாப்பினூடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலை உருவாகும் என்ற உத்தரவாதம் எம்மால் குழம்பிவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே நாம் கூட்டமைப்புக்குள் விமர்சனங்களை முன்வைத்து ஒற்றுமையுடன் செயற்பட்டோம்.

இருப்பினும் கடந்த மூன்றாண்டுகளாகவே பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதையும் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்டித்து நாம் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களித்து வந்துள்ளோம்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் இரண்டாண்டு காலம் நீடிப்பை வழங்க வேண்டாம் என்று நாம் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்காததால் எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட நானும் ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளிவந்த அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கும் எத்தகைய விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை என்பதை எமது கட்சியின் சார்பில் அறிக்கையாக வெளியிட்டிருந்தோம்.

அதன் காரணமாகவே இன்றுவரை எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவரினால் மறுக்கப்பட்டு வருவதை நாடே அறியும். ஒட்டுமொத்தத்தில் எமது கொள்கை நிலைப்பாடு சரியானதே என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயகத்தில் எண்ணிக்கை பெரும்பான்மையின் முடிவுகள் எப்போதும் சரியானதாக இருக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *