புதிய அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டோம்! ரணிலின் கரங்களைப் பலப்படுத்துவோம்!! – மைத்திரியிடம் நேரில் இடித்துரைத்தது முற்போக்குக் கூட்டணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து அமைக்க முயற்சிக்கும் புதிய அரசுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கவும் முடிவெடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய அரசுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்த வேளையிலேயே, கூட்டணி உறுப்பினர்களால் அது கூட்டாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனோ கணேசன்,

“நாகரிகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறு (6) எம்.பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாகக் கூறிவிட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பங்காளிக் கட்சியாகவுள்ள மலையக மக்கள் முன்னணியும், கூட்டணியின் ஏனைய இரு எம்.பிக்களும் மஹிந்தவை ஆதரிக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *