ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமை அரசமைப்புக்கு முரண்! நாடாளுமன்றை உடன் கூட்ட அழுத்தம் கொடுங்கள்!! – அமெரிக்கத் தூதுவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதிவியிலிருந்து நீக்கியமை, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை, நாடாளுமன்றத்தைக் கூட்ட விடாமல் முடக்கி வைத்திருக்கின்றமை, பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக் காட்டுவதற்காகப் பல கோடி ரூபாவை அள்ளி வீசி எம்.பிக்களை விலைக்கு வாங்குகின்றமை என இலங்கையில் கடந்த வாரத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அரசமைப்புக்கு விரோதமானவை. இந்தக் கேவலமான நடவடிக்கைகளுக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

“ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான ஜனாதிபதியின் செயல்களை – நடவடிக்கைளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குத் தீர்வுகாண உடனடியாக செயற்பட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சபாநாயகரை எழுத்து மூலமாகக் கேட்டுக்கொண்டேன். பெரும்பான்மையான எம்.பிக்களும் சபையை உடன் கூட்டுமாறு எழுத்து மூலம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு எழுத்து மூலம் சபாநாயகர் கொண்டு வந்தார். ஆனால், நாடாளுமன்றத்தைக் கூட்ட விடாமல் அதனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஜனாதிபதி முடக்கி வைத்துள்ளார். இது எந்த வகையில் நியாயமானது? எனவே, நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் இதன்போது இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

“இலங்கை அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளை போதியளவு கையாளவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை போன்ற விடயங்களில் அரசு மந்தகதியிலேயே செயற்பட்டது .

இந்த விடயங்களில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பிளவுபடாத – பிரிக்கமுடியாத நாட்டுக்குள் உண்மையான ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வொன்றை அடைவது அவசியம்.

அத்தகைய தீர்வை அடைய முடியாத பட்சத்தில், இந்த நாடு எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது போகும்.

இலங்கை அரசானது சர்வதேச சமூகத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும்” எனவும் அமெரிக்கத் தூதுவரிடம் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *