நாடாளுமன்றை 14ஆம் திகதி வரை முடக்கி வைத்திருப்பது அராஜகம்! அரசியல் குழப்பத்தால் ஜனநாயகமும் கேள்விக்குறி!! – சம்பந்தனுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் காட்டம்

“ஒரு நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டால் அதற்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம்தான் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப சூழ்நிலையால் இந்நாட்டின் ஜனநாயகமே கேள்விக்குறியில் உள்ளது.”

– இவ்வாறு இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்தார்.

பெரும்பான்மையான எம்.பிக்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் வேண்டுகோள்களைப் புறந்தள்ளிவிட்டு நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை முடக்கி வைத்திருப்பது அராஜகத்தனம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இன்று கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்துகின்றது. தற்போது நிலவும் அரசியல் குழப்ப சூழ்நிலைக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இதற்குத் தடையாக உள்ளவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி உண்மையின் பிரகாரம் – நீதியின் வழியில் செயற்பட வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“தமிழ் மக்களின் விடயத்தில் அமெரிக்கா தனிக் கவனம் செலுத்தியுள்ளது. இந்நாட்டில் மீண்டுமொரு இரத்தக்களறி ஏற்படக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் நோக்கத்திற்கும் அதன் நடைமுறைப்படுத்தலுக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” எனவும் அவர் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் அரசியல் விவகாரப் பிரிவின் பொறுப்பாளர் அந்தனி ரென்சூலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *