மஹிந்தவிடம் சரணாகதியடைந்த வியாழேந்திரன் பச்சைத் துரோகி! – சீறுகின்றனர் மட்டக்களப்பு தமிழ் மக்கள்

“பிரதி அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக தமிழினத்தின் கொள்கையைப் பல கோடிகளுக்குப் பேரம் பேசி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணாகதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஒரு பச்சைத் துரோகி.”

– இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் கடும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

தமிழர்கள் ஒற்றுமையையே முதலாவதாக எதிர்பார்ப்பவர்கள். கொள்கைக்காக பல்லாயிரம் உயிர்களையும் தியாகம் செய்த இனம் தமிழினம். இந்த இனத்திலிருந்து மக்கள் பிரதிநிதியொருவர் காலைவாருவது, மக்களை கொதிப்படையச் செய்யும். அது, உடனேயே எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. சமூகவலைத் தளங்களில் பலரும் தமது கண்டனக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை காக்கை வன்னியர்கள் இருக்கவே செய்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளனர். மிக மோசமாக, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பிரயோகித்து வியாழேந்திரனை வசைபாடிப் பதிவிட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்க் கலைஞர் சங்கத்தின் முக்கியஸ்தர் தி.பார்த்தீபன் தெரிவித்ததாவது:-

“எமது சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் போராடி வருகின்றது. ‘வீடு’தான் எங்கள் சின்னம். அந்தச் சின்னத்தில் போட்டியிட்டவர்களுக்கு அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக நாம் வாக்களிக்கவில்லை. கொள்கையின் வழியில் நின்று எமது உரிமையைப் பெறுவதற்காகவே நாம் வாக்களித்தோம். எங்கள் வாக்குகளினால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான சதாசிவம் வியாழேந்திரன் நேற்று மஹிந்தவிடம் சரணாகதி அடைந்துவிட்டார். பிரதி அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக தமிழினத்தின் கொள்கையைப் பல கோடிகளுக்குப் பேரம் பேசி மகிந்தவின் கரங்களை இறுகப் பற்றியுள்ளார். இவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது. இவர் பச்சைத் துரோகி” – என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேந்திரன்,

“கிழக்கில் அமைச்சுப் பதவிகளை வைத்துள்ள முஸ்லிம்கள், தமிழர்களை ஒடுக்கி தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கின்றனர். அதனைத் தடுக்க வேண்டுமாக இருந்தால் கிழக்கில் தமிழர்களும் அமைச்சு அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருக்கத்தான் வேண்டும். அதனைக் கருத்தில்கொண்டே கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவியை வியாழேந்திரன் பொறுப்பேற்றுள்ளார் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனை நாம் ஏற்கமாட்டோம். பல கோடிகளைப் பெற்று மைத்திரி – மஹிந்தவின் கால்களில் விழுந்துதான் அமைச்சுப் பதவி பெறவேண்டிய அவசியம் கிடையாது. அவர் தனது சுகபோக வாழ்க்கைக்காகவே அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ளார். இவரை வரலாறு மன்னிக்காது.

தமிழினத் துரோகி பிள்ளையானின் கட்சியிலிருந்த வியாழேந்திரனை புளொட் அமைப்பே இழுத்து வந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வைத்தது. வியாழேந்திரனின் பச்சைத் துரோகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பே பொறுப்பாகும். புளொட் அமைப்பின் சார்பிலேயே இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டார். விரைவில் இவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தக்க பாடம் புகட்டும்” – என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் அணி உறுப்பினர் மாணிக்கவாசகர் குலேந்திரன்,

“கிழக்கில் இன்னொரு துரோகி வெளிப்பட்டுள்ளார். சலுகைகளுக்கு – கோடிகளுக்கு ஆசைப்பட்டு தமிழ்த் தேசியத்தை விற்றுவிட்டார். இவரைத் தமிழினம் மன்னிக்காது” – என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.புவிதரன்,

“பதவிக்காகவும் பணத்துக்காகவும் ஆசைப்பட்டு சர்வாதிகாரியான மஹிந்தவிடம் சரணடைந்த வியாழேந்திரனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். மாவட்டத்தை விட்டு இதுவரை விரட்டியடிப்பார்கள்” – என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சிவில் அமைப்புக்களின் இணைப்பாளர் வடிவேல் சுரேஷ்,

“நேற்றுக் காலையில்தான் கனடாவில இருந்து இலங்கை வந்த வியாழேந்திரன் தனது வீட்டுக்குக்கூடப் போகாமல் வானூர்தி நிலையத்திலிருந்து நேரே மஹிந்தவின் வீட்டுக்குப் போயுள்ளார். அங்கு அவர் பல கோடி ரூபா பணத்தைக்கண்டு மகிந்தவின் கால்களில் விழுந்து பிரதி அமைச்சுப் பதவியைப் பேரம் பேசி எடுத்துள்ளார். இது அவருக்குப் படுகேவலமானது. எமது வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்ற இவரை நாம் சும்மா விடலாகாது” – என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சிவில் அமைப்புகளின் உறுப்பினர் சிவராஜா கஜன்,

“பிரதமர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க இருக்கும் முடிவு ரணிலுக்கானதோ அல்லது மஹிந்தாவுக்கானதோ அல்ல. அது தமிழினத்தின் விடுதலைக்கானது. அந்த முடிவு இனத்தின் பிரதிநிதி என்னும் அடிப்படையில் எடுக்கப்படுமே அன்றி எண்ணிக்கை அடிப்படையில் எடுக்கப்படாது. துரோகிகளின் வெளியேற்றம் அம்முடிவை எவ்வகையிலும் பாதிக்காது. வியாழேந்திரன் ஒரு பச்சைத் துரோகி” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *