அரசியல் குழப்பத்தை கருதாது – அபிவிருத்திகளை தொடர்ந்தும் முன்னெடுங்கள் – அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தடையாகக் கருதாது இவ்வாண்டு நிறைவடையும் போது நிறைவுசெய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


இன்று (02) முற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுபோதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்பு விடுத்தார்.

நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் 2019ஆம் ஆண்டை சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார்.

இதன் கீழ் நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நடும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சூழல் பாதுகாப்பிற்காக விரிவானதோர் பணியை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி;, இதற்கு மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை பிள்ளைகள் மற்றும் அனைத்து பிரஜைகளினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கண்டறிவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை அபிவிருத்தி, வனஜீவராசிகள், காணி, வீடமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வரட்சி காரணமாக அழிவுக்குள்ளான விவசாய நிலங்களுக்கான நட்ட ஈடு வழங்கும் முறைமை குறித்து ஜனாதிபதி அவர்கள் இதன்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சிறுபோகத்தின்போது வரட்சியினால் அழிவுக்குள்ளான வயல் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு விதை நெல்லை இலவசமாக வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *