இலங்கையர் படுகொலை செய்யப்பட்டது ஏன்? மனைவியின் உருக்கமான பதிவு!

பாகிஸ்தானில் நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை இரு நாடுகளிலும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது, இந்த சம்பவத்தை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்துள்ளார்.

பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளரான 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.

இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தை தனது நாட்டுக்கு அவமானகரமான நாள் என அவர் வர்ணித்துள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தாங்கள் விரக்தியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட பிரியந்தவின் மனைவி இதனை கூறியுள்ளார்.

“எனது கணவருக்கும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் நீதி வழங்குவதற்கு” முழுமையான விசாரணையை நடத்துமாறு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

“இணையத்தில் அவர் தாக்கப்படுவதை நான் பார்த்தேன். அது மிகவும் மனிதாபிமானமற்றது,” என்று அவர் கூறினார்.

இந்த கொலையின் காணொளிகள் வார இறுதியில் சமூக ஊடகங்களில் பரவியது, மேலும் ஆத்திரமடைந்த கூட்டம் பிரியந்தவை அவரது பணியிடத்திலிருந்து இழுத்துச் சென்று அடித்துக் கொன்ற காட்சிகளைக் காட்டியது.

பின்னர் அவர்கள் அவரது உடலை எரித்தனர், மேலும் கூட்டத்தில் பலர் அவரது சடலத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

வன்முறைக்கு வழிவகுத்தது எது?

முஹம்மது நபியின் பெயர் கொண்ட சுவரொட்டிகளைக் கிழித்ததில் பிரியந்த ஒரு அவதூறான செயலைச் செய்ததாகக் கூறப்படும் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து வன்முறைகள் தொடங்கியதாக உள்ளூர் காவல்துறைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் அந்த இடத்திற்கு விரைந்த சக ஊழியர் ஒருவர், பிரியந்த கட்டிடம் சுத்தம் செய்யப்படவிருந்ததால் சுவரொட்டிகளை மட்டுமே அகற்றியதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.

அவரது மனைவியும் அவதூறு குற்றச்சாட்டை மறுத்துள்ளார். “என் கணவர் தொழிற்சாலையில் சுவரொட்டிகளைக் கிழித்ததாகக் கூறப்படும் செய்திகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவர் ஒரு அப்பாவி மனிதர்” என்று அவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

“பாகிஸ்தானின் வாழ்க்கை நிலைமைகளை அவர் மிகவும் அறிந்திருந்தார். அது ஒரு முஸ்லிம் நாடு. அவர் அங்கு என்ன செய்யக்கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார், அதனால் அவர் பதினொரு வருடங்கள் அங்கு பணியாற்றினார்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பயங்கரமான இந்த தாக்குதலை கண்டித்ததோடு, சட்டத்தின் முழுக்கடுமையுடன் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

நிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது கடவுளைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதாக வரையறுக்கப்படுகிறது.
பாகிஸ்தானில், இஸ்லாத்தை அவமதிக்கும் எவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம். நாட்டின் மத நிந்தனைச் சட்டம், மதக் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பது, அடக்கம் செய்யும் இடங்களில் அத்துமீறி நுழைவது, மத நம்பிக்கைகளை அவமதிப்பது அல்லது வழிபாட்டுக்குரிய இடத்தையோ அல்லது வழிபாட்டுக்குரிய பொருளையோ வேண்டுமென்றே அழிப்பது அல்லது அசுத்தப்படுத்துவது ஆகியவற்றைத் தடை செய்கிறது.

இஸ்லாமிய நபர்களுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை கூறுவது குற்றமாகும். மேலும் 1982 இல், முஸ்லிம்களின் புனித நூலான குரானை “வேண்டுமென்றே” இழிவுபடுத்தியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கும் பிரிவு சேர்க்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டில், முஹம்மது நபிக்கு எதிரான தூஷணத்தை தண்டிக்க ஒரு தனி ஷரத்து சேர்க்கப்பட்டது. அத்துடன், “மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும்” பரிந்துரைக்கப்பட்டது.

பாகிஸ்தானில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூட, குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு சந்தேகநபர்களுக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கூட்டு வன்முறையைத் தூண்டும்.

சிறுபான்மையினர் பெரும்பாலும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகிறார்கள் என்று மனித உரிமை விமர்சகர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவின் கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சியல்கோர்ட் பொலிஸ் பிரதானி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 26 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *