நாடாளுமன்றைக் கூட்டாவிடின் மேற்குலகம் கடும் நடவடிக்கை! – மைத்திரிக்கு எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரித்துள்ள மேற்குலகம், உடனடியாக நாடாளுமன்றதைக் கூட்டாவிட்டால் இலங்கை மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி ஏற்படும் என்றும் கடும் தொனியில் தெரிவித்திருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரைச் சந்தித்துள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், ஐ.நா. இராஜதந்திரிகள் ஆகியோர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என அறியவந்தது.

முதற்கட்டமாக இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை உடன் நிறுத்துவதற்கும், பின்னர் பொருளாதாரத் தடை விதிப்பதற்கும் மேற்குலகம் தயாராகி வருகின்றது என இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் பிரதமராக்கி அவருடன் இணைந்து தனித்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தையும் அவர் நவம்பர் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள், எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஐ.தே.க., ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன சபாநாயகரைக் கடிதம் மூலம் கோரியுள்ளன.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தொடர்பில் மேற்குலக நாடுகள், ஐ.நா. தரப்புகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபாலவுடனும், சபாநாயகர் கரு ஜயசூரியவுடனும் மேற்குலக நாடுகளின் தூதுவர்களும், ஐ.நா. இராஜதந்திரிகளும் மாறி மாறி பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க மேற்குலகு தயாராகிவிட்டது என ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

முதற்கட்டமாக இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதற்கும், அதன் பின்னர் பொருளாதாரத் தடையை விதிப்பதற்கும் மேற்குலக நாடுகள் கூட்டாகத் திட்டமிட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *