‘பிரதமர்’ கதிரை சண்டையால் கலக்கத்தில் மக்கள் – நடக்கப்போவது என்ன?
ஆட்சிமாற்றத்துக்கான சிறந்த ஜனநாயக வழியாக தேர்தலே கருதப்படுகின்றது. அதைவிடுத்து வேறுவழிகளில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த எத்தனிப்பதானது வீண் குழப்பங்களுக்கே வழிவகுக்கும். இலங்கை அரசியலிலும் தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலைதான் உருவெடுத்துள்ளது.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து – அதை நிறைவேற்றி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் பட்ஜட்டை தோற்கடிப்பதன் ஊடாக புது ஆட்சியொன்றை மலரச்செய்திருக்கலாம்.
இவற்றையெல்லாம் விடுத்து – ஜனாதிபதி மைத்திரி கையாண்ட நுட்பம்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆட்சிமாற்ற நடவடிக்கையானது அரசமைப்புக்கு முரணானது என ஐக்கிய தேசியக்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் சுட்டிக்காட்டிவருகின்றன.
எனினும், அரசமைப்பின் பிரகாரம்தான் புதிய பிரதமரை நியமித்து , புதிய அரசொன்றை தான் அமைத்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலடிகொடுத்துவருகிறார்.
நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றதோ அவர்தான் பிரதமராக வரமுடியும். எனவே, ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மஹிந்தவுக்கும், ரணிலுக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். இதை செய்யாமல், நாடாளுமன்றத்தை முடக்கியமைதான் பலகோணங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
நல்லாட்சிதான் சட்டபூர்வமான அரசு என ரணிலும், அவரது சகாக்களும் அறிவித்துவரும் நிலையில், புதிய ஆட்சிதான் ஏற்புடையது என மைத்திரி – மஹிந்த கூட்டணி அறிவித்துவருகின்றது. இதனால், நாட்டின் அரசியல் ஸ்தீரமற்றதன்மை ஏற்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதார மட்டத்தில் உறுதியான முடிவுகளை எடுக்கமுடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அத்துடன், வெளிநாட்டு முதலீடுகளும் தேக்கமடைந்துள்ளன. சுற்றுலாப்பயணிகளின் வருகையிலும் வீழச்சி ஏற்பட்டுள்ளது.
எதுஎப்படியோ அரசியல் வாதிகளுக்குpடையிலான அதிகார – கதிரைக்கான மோததால் இன்று அனைத்து வழிகளிலும் நாட்டு மக்களுக்கு திண்டாடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.