மைத்திரியின் அதிர்ச்சி வைத்தியத்தால் மதங்கொண்டது யானைப் படை! பதிலடி கொடுக்கத் தயாராகின்றது குற்றவியல் பிரேரணை!!
ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்புக்கு முரணான வகையில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது.
இதற்கான பொறுப்பு அரசமைப்பு நிபுணர் ஜயம்பதி விக்கிரமரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்களிடம் இன்றிலிருந்து கையொப்பங்கள் பெறப்படுகின்றன.
எனினும், நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை முடக்கியுள்ளதால் ஐ.தே.கவின் இந்த வியூகம் வெற்றியளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஐ.தே.கவின் தலைமையில் பொதுவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரிபால சிறிசேன, தற்போது புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து ஐ.தே.கவுக்கு எதிரான அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றமை அக்கட்சி எம்.பிக்களுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.