World

40 வயதில் 44 குழந்தைகள்! 18 ஆண்டுகள் பிரசவம்!!

உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி மரியம் நபடான்ஸி ஆவார்.

முகோனோ மாவட்டத்தில் வசித்து வரும் இப்பெண்மணி வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழிந்துவிட்டது.

40 வயதான இவருக்கு 44 குழந்தைகள்! இவற்றில் 6 இரட்டைக் குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனிக் குழந்தைகள் என்று பிரசவித்திருக்கிறார்.

44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர்.

நரகமாய் அமைந்த வாழ்க்கை

சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்த மரியத்துடன் பிறந்த சகோதரர்கள் 4 பேருக்கு அவரது சிற்றன்னையே விஷம் வைத்து கொலை செய்துவிட்டார்.

மரியம்முக்கு 12 வயது இருக்கும் போது 28 வயது நபருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர், தினமும் கணவர் இவரை அடித்து உதைத்துள்ளார்.

தினமும் குடித்துவிட்டு ரகளை. நரக வாழ்க்கை. விருப்பம் இல்லாவிட்டாலும் மறுக்க முடியாது, குடும்பம் நடத்திதான் ஆக வேண்டும் என்ற நிலை.

வீட்டில் இருக்கும் பலவேலைகளை செய்வது மட்டுமல்லாமல், வெளியில் சென்றும் வேலை செய்வேன்.

 

இதில் பெரும்பாலும் நான் கர்ப்பத்தோடுதான் இருப்பேன். ஆனாலும் குழந்தைகள் மூலமே கொஞ்சம் மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான பற்றும் எனக்கு ஏற்பட்டது என்கிறார் மரியம்.

எனது கணவருக்கு நான் மட்டும் மனைவி அல்ல. பல மனைவிகள் உள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை இரவில்தான் இங்கே வருவார். குடும்பம் நடத்துவார். அதிகாலை குழந்தைகள் கண் விழிப்பதற்குள் கிளம்பிவிடுவார்.

என் மூத்த மகனே 13 வயதில்தான் அவன் அப்பாவைப் பார்த்தான். என்னுடைய பல குழந்தைகள் அவரை இதுவரை பார்த்ததில்லை.

மரபணு பிரச்சனை

1994-ம் ஆண்டு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதற்குப் பிறகு 2, 3, 4 என்று குழந்தைகள் பிறந்துகொண்டே இருந்தன.

என் அப்பாவுக்குப் பல மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் பிறந்தன.

25-வது குழந்தை பிறந்த பிறகு மருத்துவரிடம் சென்றேன். வயிற்றில் உருவான கருவைக் கலைக்கச் சொன்னேன். பல கருக்கள் இருந்ததால் கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று கூறிவிட்டார். இப்படி ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும்போதும் மருத்துவரிடம் செல்வேன்.

அவரும் இது மரபணு பிரச்சினை. அதிகமான சினை முட்டைகள் உருவாகின்றன, கலைக்க முடியாது என்று கூறிவிடுவார். 44-வது குழந்தைக்குப் பிறகு கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன்.

துயரத்திலும் பயணிக்கும் அன்றாடம் வாழ்க்கை

ஒரு நாளைக்கு 10 கிலோ சோள மாவு, 4 கிலோ சர்க்கரை, 3 பார் சோப் எங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது.

பணக்கஷ்டம் இருந்தாலும் அன்றாடம் வேலைக்கு சென்று எனது பிள்ளைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். இதுவரை பட்டினி போட்ட கிடையாது. கிடைக்கும் வேலைக்கு சென்று எனது குடும்பத்தை சந்தோஷமாக கவனித்து வருகிறேன் என்கிறார் மரியம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading