வடக்கு, கிழக்கில் ஆளுநர் ஆட்சி தொடர்ந்திருக்க அனுமதிக்கக்கூடாது! களமிறங்க விக்கி தயாரா? – கேட்கிறார் நஸீர்
“கிழக்கு மாகாண சபை இப்போது ஆளுநரின் அதிகாரத்தில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கின்றது. நாம் மாகாண சபையின் ஆட்சிப்பீடத்தில் இருந்தபோது பல முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்து பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். ஆனால், ஆளுநர் ஆட்சிக்குள் கிழக்கு வந்ததன் பின்னர் இதுவரை அரசின் மூலமாக அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் என்ன என்பதை பார்ப்போமானால் எதுவும் இல்லை என்பதே பதிலாகும் தற்போது அங்கு எல்லாமே வியாபாரமயமாகிக் கொண்டிருக்கின்றது. இந்நிலை வடக்கு மாகாண சபைக்கும் ஏற்படக்கூடாது. எனவே, வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவேண்டும். இதற்கு அவர்கள் தயாரா?”
– இப்படியொரு அழைப்பை விடுத்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.
இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“2015ஆம்ஆண்டு ஜனாதிபதி முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத் தில் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தமை காரணமாகவே கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கலப்புத் தேர்தல் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது பழைய தேர்தல் முறைமை காரணமாக அதிக பணவிரயம், தகுதியற்றவர்கள் நியமனம், பொறுப்புக்கூறல் அற்ற பிரதிநிதித்துவம், பெண்களுக்குரிய இட ஒதுக்கீடு இல்லாமை போன்ற பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
எனினும், கலப்பு முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் ஏற்பட்டிருக்கும் நிலையைப் பார்க்கும்போது பணவிரயம் முன்னரை விட 5 மடங்கு அதிகரித்திருக்கின்றது. தகுதியில்லாதவர்கள் நியமனங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு எனக் குரல் எழுப்பியபோதும். உண்மையான அரசியல் ஆர்வம்கொண்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சிகள் தமக்கு வேண்டிய பெண்களை நியமிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு சபைகளிலும் இருப்பதற்குக் கூட இடமில்லாத வகையில் சபை அங்கத்தவர்களின் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது இம்முறைமை படுதோல்வி கண்டுள்ளது. எனவே, இதனை அறிமுகம் செய்த ஜனாதிபதிதான் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். தொடர்ந்தும் கலப்புத் தேர்தல் முறைமையை மாகாண சபைத் தேர்தலிலும் திணிக்கவே அவர் விரும்புகின்றார். இதனை சிறுபான்மையாராகிய நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
கிழக்கில் தற்போது நடைபெறும் ஆளுநர் ஆட்சி முறைமையைப் பார்க்கும்போது பெரும் அச்சம் ஏற்படுகின்றது. அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் நாம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம். இந்நிலை, வடக்கிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எமது ஆதங்கம் ஆகும்.
எனவே, வடக்கின் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளும் கிழக்கின் முன்னாள் பிரதிநிதிகளும் இணைந்து மாகாண சபைத் தேர்தலை விரைவில் வடக்கு, கிழக்கில் நடத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டியது அவசியமானது” – என்றுள்ளது.