மஹிந்த ஆட்சியைவிட நல்லாட்சி சிறப்பானது! – இந்தியாவில் அமைச்சர் ஹக்கீம் புகழாரம்

யுத்தம் காரணமாக இந்திய அகதிமுகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறும் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயம் நிகழ்த்தும் நினைவேந்தல்” நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (26) சென்னை சென்றடைந்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு சென்னை விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் அரசியல் பிரமுகர்களினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டது.
அதன்பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மத்தியில் அமைச்சர் மேலும் பதிலளிக்கையில் கூறியதாவது;
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையிலுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணவேண்டும். இதற்காக இரு நாடுகளின் மீனவ சங்கங்கள் உள்ளடங்கலாக வெளியுறவு அமைச்சு மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களின் சிபார்சுகளில் நாங்கள் தீவிர கரிசணை செலுத்திவருகிறோம். இலங்கை, இந்திய நாடுகளின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும் சுமூகமானதொரு தீர்வை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.
கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மாலை 4 மணிக்கு சென்னை, வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ளது. இந்திய முஸ்லிம் யூனியன் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பல இந்திய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *