தொண்டமானுடனான இறுதி சந்திப்பை என்னால் மறக்க முடியாது

ஆறுமுகன் தொண்டமான் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் என்னை சந்தித்து இறுதியாக உரையாடிய அத்தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.
அந்த நேரத்திலும் தனது மக்கள் தொடர்பாகவே அவர் கவனம் செலுத்தியதை நான் பெரிதும் மதிக்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் வழமைக்குத் திரும்ப வேண்டுமென்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டியிருந்ததையும் நான் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றேன். பிரதமர் மஹிந்த ராஜபஷ தனது அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையிட்டு ஒட்டுமொத்த பெருந்தோட்ட மக்களுக்கும் நான் தனிப்பட்ட ரீதியில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.
தொண்டமான் பரம்பரைக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் இடையில் ஒரு வலுவான உறவு காணப்படுகிறது.
இவர் தனது பாட்டனாரான செளமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே தமது மக்களுக்கு சேவை செய்துள்ளார். அந்த தியாகத்தின் பிரதிபலனாகவே இன்று தோட்ட மக்கள் பல சலுகைகளை அனுபவிக்கின்றனர். பெருந்தொட்டத் துறையினருக்கு குடியுரிமை வழங்குவதிலும் அவர்கள் இந்நாட்டின் குடிமக்களாக வாழவும் தொண்டமான் பரம்பரையினர் மகத்தான சேவையை செய்துள்ளனர்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஜனநாயகத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். தோட்ட மக்களிடையே பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அனுமதிக்காத பெருமை இவரையே சாரும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போது நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒரு ஜனநாயக தலைவராக அவர் வழங்கிய ஆதரவு மிக முக்கியமானது.
மலையகத்தில் வாழும் அனைத்து சமூகத்தினரதும் ஆதரவு அவருக்கு காணப்பட்டது. தோட்டப் பகுதியில் வாழ்பவர்களுக் காக அவர் வீடுகள், வேலைவாய்ப்பு, சம்பளம், நெடுஞ் சாலைகள், மின்சாரம் மற்றும் பல்கலைக்கழகம் போன்றவற்றைப் பெறுவதில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
தோட்ட மக்களை அவர் என்றும் ‘எமது மக்கள்’ எனும் சகோதார உணர்வுடனேயே அழைப்பார். எனக்கு அவருடன் சிறந்த நட்பு காணப்பட்டது. அவரின் நினைவை என்றும் இதயத்தில் வைத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *