தோல்வி கண்டுள்ளது வடக்கு சபை! முதல்வர் விக்கியே முழுக் காரணம்!! – சீறிப் பாய்கின்றார் தவராசா

“வடக்கு மாகாண சபையின் தெளிவற்ற, வினைத்திறனற்ற செயற்பாடுகளால் செய்யவேண்டிய பலவற்றைச் செய்யாமல் தவறிழைத்துள்ளது. அதனால் சபையின் ஐந்து ஆண்டு காலத்தில் சபை தோல்வி அடைந்துள்ளது.”

– இவ்வாறு வடக்கு சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளும் நிறைவடைய உள்ளன. இந்தநிலையில் மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பேசப்படுகின்றது. அதில் அரசியல் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் நகர்வில் பலதை மாகாண சபை செய்துள்ளது. ஆனால், மாகாண சபையின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளில் அவ்வாறில்லை.

அரசியல் சம்பந்தமான அந்த நகர்வு மட்டும் சபைக்குப் போதாது. அவ்வாறு அரசியல் ரீதியான நகர்வுகளில் எங்களின் ஆதங்கங்களை வெளிக்காட்டும் வழிமுறையில்தான் பலதைச் செய்திருக்கின்றோம். ஆனால், மாகாண சபையின் விடயப் பரப்புக்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைத்தான் மாகாண சபை செய்யவேண்டியது.

அத்தகைய செயற்பாடுகளைச் செய்யாததால் மாகாண சபை அதில் தோற்றிருக்கின்றதென்றே கூறலாம். அதிலும் செய்யவேண்டியது எத்தனையோ விடயங்களைச் செய்யவும் இல்லை. அவற்றை நடைமுறைப்படுத்தவும் இல்லை. அது மட்டுமல்ல, நாங்கள் அதிலே எத்தனையே தவறுகளை விட்டிருக்கின்றோம். சந்தர்ப்பங்கைள இழந்திருக்கின்றோம். வினைத்திறனற்ற செயற்பாடுகளை செய்திருக்கின்றோம். எத்தனையோ அதிகார வரம்பு மீறிய செயற்பாடுகளைக் கூடச் செய்திருக்கின்றோம். இதனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனை நான் தனியே குற்றஞ்சாட்டுவதாகக் கருதக் கூடாது.

முதலமைச்சரின் அரசியல் செயற்பாடுகளுக்கு நான் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றேன். அரசமைப்பு மாற்றத்துக்கான முயற்சிக்கு வரைவுகள் தயாரிப்பதிலும் அதனை அவர் சார்பாக அரசியல் நிர்ணயச் சபைக்கு எடுத்தியம்பியிருக்கின்றேன்.

அவருடன் சேர்ந்து மாகாண சபை முடிவுகளைக் கூட சபாநாயகரிடம் கொடுப்பதற்கும் சென்றிருக்கின்றேன். இதற்கு நான் சார்ந்த ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. அத்தோடு அவ்வாறான செயற்பாடுகளுக்கு முழு ஆதரவை வழங்காத நிலையிலும்கூட நான் அதனைச் செய்திருக்கின்றேன்.

ஆனால், மாகாண சபையின் நிர்வாக விடயங்களில் முழுக்க முழுக்க அவருடைய செயற்பாடுகளை எதிர்க்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் அவர்தான் தலை. அவர் சரியாக இருந்தால்தான் மற்றதெல்லாம் சரியாக நடக்கும். முழு அதிகாரம் உடையவர் அவர்தான். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அவர்தான் பொறுப்பெடுக்க வேண்டும்.

உண்மையில் அவர் தன்னுடைய நிர்வாகச் செயற்பாடுகளில் சரியாக நடக்கவில்லை. அவர் எல்லாவற்றையம் அரசியல் மயப்படுத்திய விடயமாகத்தான் கையாண்டிருக்கின்றார். அதனால் பலதைச் செய்யாமல் தவறு விட்டிருக்கின்றோம். அவ்வாறு அவர் அதனைச் செய்யாததால் வினைத்திறனற்ற நிலைமை ஏற்பட்டது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *