காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு!

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு காத்தான்குடி பொதுமக்கள் மகத்தான வரவேற்பு அளித்ததுடன், அவரைப் பாராட்டிக் கௌரவித்தனர்.

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவாகியதைப் பாராட்டிக் கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு, உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உலமாக்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினாலும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது பொதுச் சபைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை மக்காவில் நடைபெற்றது. இதில் தெற்காசிய பிரதிநிதியாக பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் அங்கு தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார். இலங்கை வரலாற்றில் முன்னாள் சபாநாயாகர் எம்.எச்.முஹம்மட்டுக்கு பின்னர் இப்பாரிய பொறுப்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *