சபரிமலைக்குள் நுழைந்த பெண்கள் தடுத்து நிறுத்தம் – திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள், அர்ச்சகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இதை அமல்படுத்தப் போவதாக இடதுசாரிகள் தலைமையிலான கேரள அரசு அறிவித்தது. இதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று முன் தினம் மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனிடையே, செய்தி சேகரிப்பதற்காக தேசிய அளவிலான ஊடகங்கள் நிலக்கல், பம்பையில் முகாமிட்டுள்ளன. அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பி வருகின்றன. எனினும், இணையதளம், தொலைபேசி சேவை உள்ளிட்டவை இப்பகுதிகளில் இயங்கவில்லை.

சபரிமலைக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதியில் திரளாக நின்ற ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்து, அதில் இளம் பெண்கள் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதித்தனர். சபரிமலை நோக்கி வந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வந்தடைந்தனர்.

ரஹானா பாத்திமா இருமுடி கட்டிய பக்தராக சபரிமலை சன்னிதானத்தை கவிதாவுடன் நெருங்கினார். ஆனால், இவர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் அருகே சரணகோஷம் எழுப்பினர். 18-ம் படியின்கீழ் அர்ச்சகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தை நடத்திவரும் ஐயப்ப பக்தர்கள், அர்ச்சர்கர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே சபரிமலை சன்னிதானத்தில் நுழைய அனுமதிக்கப்படுவர். பெண் பத்திரிகையாளர், போராட்ட உணர்வை வெளிப்படுத்தும் பெண்ணியவாதியை சபரிமலை சன்னிதானத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள கேரள அரசு அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *