ஐந்தாம் தலைமுறை இளவரசன் ராகுல் காந்தியின் பிறந்தநாள்!

நேரு குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை இளவரசனாகவும் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கையாகவும் விளங்கும் ராகுல்காந்தி, இன்று (19.06.2021) தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்த நாளில் அவரைப் பற்றி அதிகம் அறிந்திராத சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறு வயதில் இருந்தே ராகுல் காந்தியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது.

அவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதால் எந்நேரமும் பாதுகாப்பு படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

அத்துடன் பாதுகாப்பு காரணங்களால் ஒரே கல்வி நிறுவனத்தில் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அடிக்கடி கல்வி நிறுவனங்களை மாற்றினார்.

டேராடூனில் பள்ளிப் படிப்பை முடித்தவர், டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் கலை இளைஞர் பட்டம் படித்தார். பின்னர் ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தார்.
தனது தந்தை ராஜீவ் காந்தி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிறகு இந்தியா திரும்பியவர், ரோலிங் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

படிப்பை முடித்த பிறகு லண்டனை அடிப்பையாகக் கொண்டு இயங்கிவந்த நிறுவனம் ஒன்றில் சில நாட்கள் கன்சல்டண்டாக ராகுல் காந்தி பணியாற்றினார்.

ராகுல் காந்தியை நேரு குடும்ப வாரிசாகவும், அரசியல்வாதியாகவும்தான் நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு தொழில் முனைவோராகவும் இருந்துள்ளார்.

அரசியலில் நுழைவதற்கு முன், பேக்அப்ஸ் சர்வீசஸ் பிரைவெட் லிமிடட் (Backups Services Private Ltd) என்ற அவுட்சோர்ஸிங் நிறுவனத்தை ராகுல் காந்தி நடத்தி வந்தார்.

மற்ற அரசியல் தலைவர்களைப் போன்று போராட்டங்களுக்காக அதிகமான முறை இவர் சிறை சென்றதில்லை.

2011-ம் ஆண்டு பட்டா பர்சால் என்ற கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளை தடையை மீறி சந்திக்க முயன்றபோது முதல் முறையாக ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அந்த முறையும் 3 மணி நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

திருமண வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவிக்காமல் வாழ்ந்துவரும் ராகுல் காந்தியை ஆப்கானிஸ்தான் இளவரசியுடன் இணைத்து சில ஆண்டுகளுக்கு முன் கிசுகிசுக்கள் எழுந்தன.

ஆனால் 2013-ம் ஆண்டு அந்த இளவரசி எகிப்து நாட்டின் இளவரசரை மணம் செய்து கொண்டார்.  அதே நேரத்தில் தனக்கு வெரோனிக் கார்டெல்லி (Veronique Cartelli) என்ற தோழி இருப்பதாக ராகுல் காந்தியே பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஆவார்.

ஜப்பானிய தற்காப்பு கலையான ஐகிடோவில் ராகுல் காந்தி பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.
ராகுல் காந்திக்கு 14 வயதாக இருக்கும்போது, அவரது பாட்டியான இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுபற்றி பின்னாளில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “என் பாட்டியைக் கொன்ற 2 மெய்க்காப்பாளர்களும் என்னுடன் பலமுறை பாட்மிண்டன் விளையாடி உள்ளனர்.

அப்படி நட்பாக இருந்தவர்கள் என் பாட்டியைக் கொன்றதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *