இந்தியாவை உலுக்குகிறது #MeToo! – பாலியல் சர்ச்சையால் மத்திய அமைச்சர் பதவி துறப்பு

#MeToo மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டதை அடுத்து, அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை, தனிப்பட்ட வகையில் நீதிமன்றத்தில் சந்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #MeToo ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அக்பரை கடுமையாக விமர்சித்தன. அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. எம்.ஜே.அக்பர் பதவி விலகக் கோரி, அவரின் வீட்டின் முன் பெண் பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் இளைஞர் அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் திடீரென தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் எம்.ஜே.அக்பர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’என் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சந்திக்க முடிவு செய்துள்ளேன். தனிப்பட்ட முறையில் வழக்கைச் சந்திக்க உள்ளதால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது நாட்டுக்காகப் பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *