சாவகச்சேரியில் வாள்களோடு வீடு புகுந்து ஆவா குழு அட்டூழியம்! – பூசகரின் குடும்பத்தைத் தாக்கி நகை, பணம் கொள்ளை

வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்த ஆவா குழுவினர் சுமார் 15 பவுண் தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நுணாவில்குளம் கண்ணகை அம்பாள் ஆலயத்துக்கு அருகில் நேற்று அதிகாலை நடந்துள்ளது. சாவகச்சேரி சிவன் ஆலயப் பூசகரின் வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

வாள்களுடன் முகமூடி அணிந்த 8 பேர் வீட்டு வளவுக்குள் நுழைந்துள்ளனர். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்துள்ளனர். கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

பூசகரின் குடும்பத்தைத் தாக்கி அறையொன்றில் அடைத்து வைத்துவிட்டு, வீட்டைச் சல்லடையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அதிகாலை 2 மணி வரை வீட்டில் தேடுதல் நடத்தியுள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். கையில் அணிந்திருந்த மோதிரங்களைக் கூரிய ஆயுதத்தால் வெட்டி எடுத்தனர் என்று கூறப்பட்டது.

பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கக் கூடாது என்று வீட்டிலிருந்தவர்களை எச்சரித்து விட்டுக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அயலில் உள்ள அம்பாள் ஆலயத்தின் திறப்புக் கோர்வையையும் எடுத்துச் சென்றுள்ள கொள்ளையர்கள், ஆலயத்தைத் திறக்க முயன்று அது பயனளிக்காததால் முயற்சியைக் கைவிட்டுச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

வீட்டிலிருந்தவர்கள் இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் மோப்ப நாய்களுடன் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *