‘யானைக்கு மதம்பிடித்தால் தாங்கமாட்டீர்’ – கூட்டுஎதிரணிக்கு ஐ.தே.க. எம்.பிக்கள் எச்சரிக்கை!

“ கூட்டரசிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறும்பட்சத்தில் தனியாட்சி அமைப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம். நாம் பொறுமையாக இருப்பதால் பலவீனமடைந்துவிட்டோம் என கூட்டுஎதிரணி கருதக்கூடாது. யானைக்கு மதம்பிடித்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துவைத்தால் நல்லது.”

இவ்வாறு மஹிந்த அணிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள்.

கூட்டரசிலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15பேர்கொண்ட அணியானது மஹிந்த தரப்புடன் இணைந்து இடைக்கால அரசமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அத்துடன், தேசிய அரசிலுள்ள ஏனைய சுதந்திரக்கட்சி உறுப்பினர்களையும் வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்துவருகின்றது.

மறுபுறத்தில் மஹிந்த அணியும் இடைக்கால அரசமைப்பதற்காக இரகசிய சந்திப்புகளை நடத்திவருகின்றது.

இந்நிலையில், இடைக்கால மேற்பார்வை அரசமைக்கும் முயற்சி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

“ பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது அதையும் தோற்கடித்தோம். கொழும்பை முற்றுகையிட முற்பட்டனர், அந்த முயற்சியும் கைகூடவில்லை. இவ்வாறுதான் ஆட்சிகவிழ்ப்பு முயற்சிலும் நடக்கப்போவதில்லை. வரவு- செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் உறுதியான சில முடிவுகளை அரசு எடுக்கும்.

அதேபோல் எந்நேரத்தில் வேண்டுமானாலும் தனியாட்சி அமைப்பதற்கு தயார்நிலையில் இருக்கின்றோம். ஜனாதிபதியை நாம் விமர்சிப்பதில்லை. அவர் எமது அணியின் சார்பில் களமிறங்கியவர்” என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *