அரசியல் கைதிகள் விடயத்தில் எதுவுமே செய்யாத ஜனாதிபதி! – சாடுகின்றார் வடக்கு முதல்வர்

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்குக் கடிதங்களை எழுதியபோதும் நேரில் சந்தித்துக் கூறியபோதும் நடவடிக்கை எடுப்பதாக மீண்டும் மீண்டும் கூறிய அவர் ஆக்கபூர்வமான-முழுமையான நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

அரசியல் கைதிகள் தொடர்பில் நேற்று பொது அமைப்புக்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்குப் பல கடிதங்களை எழுதியிருக்கின்றேன். பல சந்தர்ப்பங்களில் நேரடியாகப் பேசியிருக்கின்றேன். மீண்டும் மீண்டும் அதனைச் செய்து இப்போது நான் களைத்துப் போயிருக்கின்றேன்.

நான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தான் நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறியபோதும் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளாரே தவிர அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு முழுமையான தீர்வைக் காணவில்லை.

அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் யாரும் இல்லை என அண்மையில் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள கூறியிருக்கின்றார். அவருடைய அந்தக் கருத்து மிகத் தவறானது.

இன்று சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் அவர்களைக் குற்றவாளிகள் ஆக்கமுடியாது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதுகள்,வழக்குகள் நடத்தப்பட்டிருக்கின்றன. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகள் ஆக்க இயலாது. இதனை நான் உயர்நீதிமன்றில் பல காலங்களுக்கு முன்னரே கூறியுள்ளேன்.

குறிப்பாக நாகமணி வழக்கு என்ற வழக்கில் குற்றஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒருவரைக் குற்றவாளி ஆக்குவதற்கு முன்னர் அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் உண்மையானவையா? என்பதைத் தனிப்பட்ட சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தியதன் பின்னதாகவே குற்றவாளியாக அடையாளப்படுத்தலாம்.

வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு குற்றவாளி ஆக்க இயலாது. ஆனால் இங்கு அதுதான் நடந்திருக்கின்றது. குற்றஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் குற்றவாளிஆக்கப்பட்டிருக்கின்றார்கள். சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது சட்டத்திற்குப் புறம்பானது.

இவ்வாறான நிலையில் நீதியமைச்சர், அரசியல் கைதிகளே இல்லை என கூற இயலாது. அரசியல் காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கமான சட்டத்திற்கு மாறான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுள்ளன. சிலர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் அரசியல் கைதிகள் தான். அதனை எவரும் மறுக்க இயலாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *