கைவிடப்பட்டது ஒலுவில் மீனவர்களின் போராட்டம்!

ஒலுவில், மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறுகோரி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை (08) முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், போராட்டத்தை நேற்று (11) கைவிட்டுள்ளனரென, மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை கரையோர மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் எம்.ஜீ.எம். பகுர்தீன் தெரிவித்தார்.

கல்முனை, கரையோர மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு உரிமையாளர்கள் சங்கம், கல்முனை மாவட்ட கடற்றொழில் அமைப்பு என்பன இணைந்து மேற்கொண்ட இப்போராட்டத்தில், மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லாது தத்தமது வள்ளங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் அகழ்வு தொடர்பாக கடற்றொழில், நீரியல்வளத்துறை, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் காமினி விஜித் விஜித முனிசொய்சாவுடன் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையடுத்து, ஒருவார காலத்துக்குள் மணலை அகழ்வதற்கான நடவடிக்கையெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்து, இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட மீனவர்களின், பிரதான கடற்றொழில் இறங்கு துறையாக ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் காணப்படுகின்றது. துறைமுகத்தின் நுழைவாயில், கடந்த பல மாதங்களாக கடல் மணலால் மூடப்பட்டுக் காணப்படுவதால், மீனவர் சமூகம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளதுடன், கடற்றொழில் நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக, தற்காலிகத் தீர்வாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *