ஊவாமாகாணசபையின் பட்ஜட் 04 ஆம் திகதி சமர்ப்பிப்பு – பதிலடி கொடுக்குமா ஐ.தே.க.?

ஊவா மாகாண சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட நிதி அறிக்கை, எதிர்வரும் 4ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, அன்று மாலை தொடக்கம் தொடர்ந்து 5ம் மற்றும் 6 ஆகிய இரு தினங்களுக்கு விவாதங்கள் இடம்பெற்று, வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளன. (04-12-2018, 05-12-2018, 06-12-2018)


ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், மேற்படி வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை சமர்ப்பித்தலும், அதைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு விவாதங்களும், வாக்கெடுப்புக்களும் இடம்பெறும். மாகாண சபையின் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில், மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.

முழுமையான வரவு – செலவுத் திட்ட நிதி அறிக்கை எதிர்வரும் 4ந் திகதி முற்பகல் 9 மணிக்கு, மாகாண முதலமைச்சரும், மாகாண நிதி அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்படும்.

அதைத் தொடர்ந்து முற்பகல் 10.30 மணிக்கு, மாகாண அமைச்சர் சாலிய சுமேதவின் பொறுப்பிலுள்ள ஊவா மாகாண விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரம், உல்லாசத்துறை, போக்குவரத்து, கலாசாரம், நெசவுத் தொழில், சிறு கைத்தொழில் அமைச்சுக்களுக்கான விவாதங்களும் இறுதியாக அவ் அமைச்சுக்களுக்கான இடைநிலை வாக்கெடுப்பும் இடம்பெறும்.

அன்றைய தினமே பிற்பகல் 3.30 மணிக்கு, மாகாண அமைச்சர் உபாலி சமரவீர பொறுப்பிலுள்ள ஊவா மாகாண விவசாயத்துறை, நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி அமைச்சுக்களுக்கான விவாதங்களும், இறுதியாக அவ் அமைச்சுக்களுக்கான இடைநிலை வாக்கெடுப்பும் இடம்பெறும்.

அன்றைய தினம் 2 மணிக்கு, மாகாண அமைச்சர் அனுர விதானகமகே பொறுப்பிலுள்ள ஊவா மாகாண சுகாதாரம், தேசிய வைத்திய துறை, சிறுவர் பாதுகாப்பு, நன்னடத்தை, சமூக நலன்புரி அமைச்சுக்களுக்கான விவாதங்களும், இறுதியாக இடைநிலை வாக்கெடுப்பும் இடம்பெறும்.

எதிர்வரும் 6ந் திகதி முற்பகல் 9 மணிக்கு மாகாண முதலமைச்சரரும், நிதி அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவின் பொறுப்பிலுள்ள நிதி, திட்டமிடல், சட்டம், சமாதானம், கல்வி, உள்ளுராட்சி மன்ற, மின்சாரம் மற்றும் எரிபொருள், நிருமானத்துறை கிராமிய உட்கட்டமைப்பு, காணி அமைச்சுக்களுக்கான விவாதங்கள் இடம்பெற்று, இரவு 7 மணிக்கு இறுதி சுற்று முழுமையான வாக்கெடுப்பு இடம்பெறும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஊவா மாகாண சபை செயலாளர் ஆர்.ஏ.எய்ச்.ஏ. சமரசிங்க துரிதமாக மேற்கொண்டு வருகின்றார்.

ஊவாமாகாணசபையானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டின்கீழேயே இருக்கின்றது. எனவே, ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய முயற்சியில் ஐ.தே.க. இறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *