வீடமைப்பைத் தடுத்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிவர்! – சுமந்திரனுக்கு சுவாமிநாதன் பதில்

“எனது அமைச்சின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க எடுத்த முயற்சிகளையும் யார் தடுத்தார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு அறிவார்கள்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

வீடமைக்கும் பணிகளை அமைச்சர் சுவாமிநாதனின் அமைச்சிடம் வழங்காமல் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் வழங்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றி, புனர்வாழ்வளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் உருவாக்கப்பட் அமைச்சே மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சாகும்.

இந்த அமைச்சுக்குப் புதிய அரசு பதவியேற்றவுடன் 2016 ஆம் ஆண்டு 1400 கோடி ரூபா ஒதுக்கீடுகளை வழங்கியதில் 910 கோடி ரூபாவில் 11,253 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. மேலும் 2017 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 900 கோடி ரூபாவில் 6,174 வீடுகளை நிர்மாணித்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருந்தோம்.

அத்துடன் எமது அமைச்சின் மிகுதி ஒதுக்கீட்டில் மத்திரம் அந்த மக்களின் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தோம். இவ்வாறு அமைச்சு செய்யும் வேலைகளைச் சகித்துக் கொள்ளமுடியாத சில அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் ஒதுக்கீட்டுத் தொகை 2018 ஆம் ஆண்டுக்கு வெறும் 75 கோடி ரூபாவாகக் குறைக்கப்பட்டது.

அத்துடன் வடக்கு, கிழக்கில் வீடுகள் நிர்மாணிப்பதற்காக அமைச்சுக்கு வழங்கவேண்டிய தொகையை நிறுத்தி வீடமைப்பு அமைச்சுக்கு 300 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டிருந்து.

இந்தநிலையில் வீடு கட்டுவதற்காக 2018 ஆம் ஆண்டில் எந்த ஒக்கீடும் வழங்கப்படாத நிலையில் சாவகச்சேரி, மந்துவில் பிரதேசத்தில் இம்மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு விழாவில் சுமத்திரன் எம்.பி., எனது அமைச்சு வீடு கட்டிக் கொடுக்காத காரணத்தால் வீடு கட்டும் பொறுப்பை வீடமைப்பு அமைச்சுக்கு வழங்குமாறு கோரியிருந்தார்.

2016, 2017 ஆகிய இரண்டு வருடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கும் அண்டிய பிரதேச மக்களுக்கும் எமது அமைச்சினால் பல வேலைத்திட்டங்ளைப் பூர்த்தி செய்து மக்களிடம் கையளித்தது பற்றி இவர் அறிந்திருக்கவில்லையா?

தனிப்பட்ட அரசியல் இலாபத்தை மறந்து எல்லோரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்ய முன்வரவேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *