சீரற்ற காலநிலை நாளை சீரடையும்! – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

நாட்டில் தொடரும் மழையுடனான சீரற்ற காலநிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம், மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அத்தோடு, கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 14 ஆயிரத்து 175 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை, காலி, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 17 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 28 பாதுகாப்பு முகாம்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், களுத்துறை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களிற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளது என நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *