அரசியல் கைதிகள் விடயம் குறித்து நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம்! – கூட்டமைப்பு முயற்சி

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனி ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்தச் செய்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பதாக அறியமுடிகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் சூழ்நிலையில், அவசர, அவசியப் பிரச்சினையாக மாறியிருக்கும் இவ்விவகாரம் தொடர்பில், அரசினதும் நாடாளுமன்றத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக சபை ஒத்திவைப்பு வேளையில் விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவது குறித்து ஆரம்பத்தில் கூட்டமைப்பு திட்டமிட்டதாகத் தெரிகின்றது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க எம்.பியுடன் உரையாடினார் என்றும், தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையின் அவசர நிலைமை கருதி அந்தப் பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த விசேட விவாத முயற்சிக்கு ஜே.வி.பியின் ஆதரவை அவர் கோரினார் என்றும் தெரிகின்றது.

இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக அல்லாமல், இவ்விடயத்துக்குத் தனியாக ஒரு நாள் விவாதத்தைக் கோரலாம் என்றும், அந்த முயற்சிக்குத் தாங்கள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார்கள் என்றும் அனுரகுமார திஸநாயக்க எம்.பி., பதிலளித்திருக்கின்றார்.

டக்ளஸும் ஆதரவு

அதேசமயம், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை ஒட்டி, தனி ஒரு நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தும் கோரிக்கையைத் தாமும் ஆதரிக்கின்றார் என்றும், அதற்கான ஆதரவுக் கடிதத்தைத் தாமும் எழுத்தில் வழங்குவார் என்றும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய மலையக மற்றும் தமிழ் பேசும் எம்.பிக்களின் எழுத்து மூல ஆதரவையும் இதற்குப் பெற முயற்சி எடுக்கவேண்டும் என்றும் தமிழ்க் கூட்டமைப்புத் தரப்புக்கு யாழ். மாவட்ட எம்.பியான ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரியப்படுத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அத்துடன், அரசியல் கைதிகள் விடயத்தில் முழு நாள் விவாதம் ஒன்றை நடத்தினால் அதற்குத் தாமும் ஆதரவு வழங்குவார் எனப் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று தம்மிடம் கூறினார் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டார்.

நேற்று நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகள் விடயம் பற்றி தான் ஆற்றிய உரையின் பின்னர் சபைக்கு வெளியே வந்தபோது தனக்கும், சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பிக்கும் நாமல் எம்.பி. இவ்வாறு கூறினார் என சிறிதரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இந்த வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து முடிந்த பின்னர், மாத இறுதியில் நடைபெறும் அடுத்த கூட்டத் தொடரில் இந்த ஒரு நாள் விசேட விவாதத்தை நடத்தலாம் எனத் தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *