அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்? – சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி
“போருக்கான அறிகுறிகள் இல்லையெனில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு ஏன் தயங்குகின்றது? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது நல்லிணக்கம் பற்றி கதைப்பதில் எவ்வித பயனும் இல்லை. அரசியல் தீர்வை வழங்காது, வடபகுதியில் தங்கத்தால் வீதி போட்டால்கூட எவ்வித மாற்றமும் ஏற்படபோவதில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“விடுதலைக்காக ஏங்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் முன்வைக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் பொருளாதாரம் பற்றி சிந்திப்பதில் நியாயமில்லை.
தம்மை புனர்வாழ்வளித்தேனும் விடுதலை செய்யுமாறுகோரி அநுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் 26ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்று (நேற்றுமுன்தினம்) சென்று பார்வையிட்டேன்.
பல நாட்களாக நீர்கூட இன்றிப் போராடும் அவர்களின் உடல்பாகங்களின் இயக்கநிலை எப்படி இருக்கும் என சிந்தியுங்கள். மக்களால் பிரதிநிதிகளால் இதை புரிந்துகொள்ளமுடியாவிட்டால் நல்லிணக்கம் பற்றி பேசுவதில் மட்டும் என்ன பயன்?
பொதுமன்னிப்பு அல்லது புனர்வாழ்வளித்தேனும் விடுதலை செய்க என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதைகூட நிறைவேற்ற முடியதா? அநுராதபுரத்திலுள்ள இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மகஸின் சிறைச்சாலையிலுள்ள 45 அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
எனவே, இனரீதியான பாடுபாடு இல்லையென்றால், தமிழர்கள் ஒடுக்கப்படவில்லையென்றால், ஓரங்கட்டப்படவில்லை என்றால் எதற்காக விடுவிப்புக்கு தயங்க வேண்டும்?
தமிழர்களை இந்நாட்டின் பிரஜையென ஏற்கும் மனோநிலை அரசுக்கு இருக்குமென்றால் தயக்கமின்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். அவ்வாறு செய்யாது நல்லிணக்கம் பற்றி கதைப்பதில் பயன் இல்லை” – என்றார்.