ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் இரகசியப் பேச்சு! – ஐவர் பதவி துறக்க முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து ‘புதுச்சுடர்’ இணையத்தளத்துக்கு அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் – மேற்படி இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளமையானது சிறிகொத்த வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மத்திய உட்பட ஆறு மாகாண சபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது என ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பியொருவர் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் நாடு திரும்பியதும் இந்தப் பட்டியல் அவரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி சப்ரகமுவ மாகாண சபைக்கு ஹேசா விதானகேயும், வடமத்திய மாகாண சபைக்கு நாலக கொலன்னேவும், வடமேல் மாகாணத்துக்கு துஷார இந்துனிலும், தென்மாகாண சபைக்கு பந்துலால் பண்டாரிகொடவும் முதல்வர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண சபைக்கு நவீன் திஸாநாயக்கவின் தம்பியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தப் பெயர்ப் பட்டியலுக்கு ஐ.தே.க. தலைவரும், செயற்குழுவும் பச்சைக்கொடி காட்டும் பட்சத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் மேற்படி உறுப்பினர்கள் தமது எம்.பி. பதவிகளை இராஜிநாமா செய்வார்கள் என அறியமுடிகின்றது.

அத்துடன் அடுத்தாண்டு பதவிக் காலம் முடிவடையவுள்ள ஊவா மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பிலும் இந்த இரகசிய சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *