7 தமிழர்களின் விடுதலை விவகாரம்: டில்லியில் இன்று மோடி – எடப்பாடி முக்கிய பேச்சு

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகின்றார். அதற்காக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை டில்லி சென்றடைந்தார்.

மோடியை எடப்பாடி தனியாக சந்திக்கவுள்ளதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கின்றார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளிப்பார் என்று தெரிகின்றது. குறிப்பாக, மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகின்றது. அடுத்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் ஜெயலலிதா ஆர்வமாக இருந்தார். அதே நிலையைத்தான் தற்போதைய எடப்பாடி தலைமையிலான அரசும் தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கு மத்திய அரசு தடையாக இருக்கின்றது. இது குறித்து பிரதமரிடம் முதல்வர் நேரில் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். மேலும், இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படுகின்றது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றது. இந்த சூழ்நிலையில் இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படலாம் என்று தெரிகின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்தித்து பேசவுள்ள நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட எந்த அமைச்சர்களையும் முதல்வர் எடப்பாடி அழைத்துச் செல்லாமல் தனியாக பேச திட்டமிட்டுள்ளார்.

அதனால் அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கியத்துவம் குறைகின்றது என்றே அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதேபோன்று, டில்லி விவகாரங்களை மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தான் கவனித்து வருகின்றார். டில்லிக்கு தமிழகத்தில் இருந்து முதல்வர், அமைச்சர்கள் யார் சென்றாலும் தம்பித்துரை உடன் இருப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பிரதமரைச் சந்திக்கவுள்ள முதல்வர், தம்பித்துரையையும் அழைத்துச் செல்லவில்லை. அதேபோன்று வைத்திலிங்கம் எம்.பியையும் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்துப் போகவில்லை. இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *