முதல் தடவையாக வத்திக்கானில் கறுப்பினத்தவர் கார்டினலாக நியமனம்!

கத்தோலிக்கத் திருச்சபையின் சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு கறுப்பு அமெரிக்கர் கார்டினலாக வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரால் நியமனம் செய்துவைக்கப்பட்டார். 72 வயதான வில்டன் கிரகோரிக்கு பாப்பரசர் கார்டினலுக்கான சிகப்புத் தொப்பியை அணிவித்து அதற்குரிய மோதிரத்தையும் அணிவித்தார். ஆயிரக்கணக்கானவர்கள் பரிசுத்த பவுல் ஆலயத்திற்குள்ளிருக்க வழமையாக மிகப்பெரும் விசேடமாகக் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் நடாத்தப்பட்டது.

தான் நினைத்ததை மிகவும் தைரியமாகச் சொல்லத் தயங்காதவர் என்ற பெயர் பெற்றவர் கிரகோரி. இவர் 2019 முதல் வாஷிங்டனில் அதியுயர் மேற்றாணியாராக இருந்தவர். கார்டினலாகியதன் மூலம் அடுத்ததாகத் தெரிந்தெடுக்கப்படும் பாப்பாண்டவருக்காக வாக்களிக்கக்கூடிய 128 கார்டினல்களில் ஒருவராகிறார்.

ஜூன் மாத ஆரம்பத்தில் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப்புகை வீசப்பட்ட மறுநாளே ஜனாதிபதி டிரம்ப் பரிசுத்த ஜான் பால் II தேசிய ஆலயத்திற்கு சென்றதை மிகவும் கடுமையாக விமர்சித்தவர். “எந்தவொரு கத்தோலிக்க பீடமும் நமது மதக் கொள்கைகளை மீறும் ஒரு பாணியில் தன்னை மிகவும் தவறாகப் பயன்படுத்தவும் கையாளவும் அனுமதிக்கும் என்பது குழப்பமானதாகவும் கண்டிக்கத்தக்கதாகவும் நான் கருதுகிறேன்” என்று அவர் அப்போது கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *