சென் பெனடிக் நலன்புரி சங்கத்துக்கு நீதிமன்ற இடைக்கால தடை
செப்டெம்பர் 29 ஆம் திகதி கொழும்பு சென். பெனடிக் கல்லூரியில் நலன்புரிசங்க வருடாந்த மாகாநாட்டை நடாத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதவான் இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளார்.
கல்லூரி நலன்புரி சங்கத்தின் சில பழைய மாணவர்களுக்கு அங்கத்துவம் வழங்காததை ஆட்சேபித்து அதாவுத ஆராச்சிகே பீலிக்ஸ் எகுனே டயஸ் என்ற பழைய மாணவரே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 

வெள்ளிக்கிழமை மாலையே நீதிமன்றத்தின் தடையுத்தரவு கிடைத்ததனால் இந்த உத்தரவை அறியாது பெருந்தொகையான பெற்றோர்கள் சனியன்று மாலை கல்லூரியின் கூட்டத்துக்கு வந்தபோதும் அவர்கள் பாடசாலை முகாமைத்துவத்தினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதேநேரம்இ இருவாரங்களுக்கு முன்பு மற்றொரு பாடசாலையின் பழைய மாணவரான ஏ.டி.எம்.எம்.லலித் மதப்புலி இதே நீதிமன்றத்தில் விசேட பொதுக்கூட்டம் நிறுத்துவதனை இடைநிறுத்துவதற்கான அனுமதியை பெற்றிருந்தார். தனக்கு பாடசாலையில் படிக்கும் பிள்ளைகள் இல்லாததன் காரணமாக முகாமைத்துவக் குழுவுக்கு தெரிவாவதை தடைவிதித்தனை ஆட்சேபித்தே இவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அரச உதவியை பெற்று இயங்கும் இக்கல்லூரி கொழும்பு ரோமன் கத்தோலிக்க மேற்றாணியாருக்கு உரித்தானது. இக்கல்லூரியின் செல்வாக்கு மிகு பழைய மாணவர்கள் சிலர் பாடசாலை முகாமைத்துவக்குழுவுக்கு அதிகார ரீதியான நியமனத்தை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்.பெனடிக் கல்லூரியின் நலன்புரி சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கத்துக்கு சமாந்தரமானது. பெற்றோர்களினால் பிரதானமாக வழங்கப்படும் நிதியை கட்டுப்படுத்த அதிகாரமில்லையென பெற்றோர்கள் வாதிக்கின்றனர். அவர்கள் இதுதொடர்பாக கல்வியமைச்சரின் தலையீட்டைப் பெறுவதற்கும் நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.